பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ இந்திய ‘ஏ’ அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி


பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ இந்திய ‘ஏ’ அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி
x
தினத்தந்தி 18 Feb 2017 9:20 PM GMT (Updated: 18 Feb 2017 9:20 PM GMT)

இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

மும்பை,

இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

பயிற்சி கிரிக்கெட்

இந்தியா ‘ஏ’– ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் மார்ஷ் (16 ரன்), விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் (7 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் கையே ஓங்கியது. எச்சரிக்கையுடன் ஆடிய மிட்செல் மார்சும், மேத்யூ வேட்டும் ஏதுவான பந்துகளை மட்டும் விரட்டியடித்தனர். அவர்களுக்கு இந்திய ‘ஏ’ அணி பவுலர்களால் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க இயலவில்லை. ஸ்கோர் 434 ரன்களாக உயர்ந்த போது, மேத்யூ வேட் 64 ரன்களில் (89 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் மிட்செல் மார்சும் (75 ரன், 159 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

469 ரன்னில் ‘டிக்ளேர்’

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 127 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மேக்ஸ்வெல் 16 ரன்களுடனும், ஸ்டீவ் ஓ கீபே 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அடுத்து அகில் ஹெர்வாத்கரும், பிரியாங் ன்சாலும் இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் காலி செய்தார். 36 பந்துகளை சந்தித்த ஹெர்வாத்கர் 4 ரன்னில் லயனின் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். பன்சால் 36 ரன்களில் (62 பந்து, 5 பவுண்டரி) வீழ்ந்தார்.

2–வது விக்கெட்டுக்கு நுழைந்த ஸ்ரேயாஸ் அய்யர், அதிரடியாக விளையாடினார். சிக்சருடன் ரன் கணக்கை தொடங்கிய அவர், சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன், ஸ்டீவ் ஓ கீபே இருவரின் பந்து வீச்சையும் நொறுக்கித் தள்ளினார். லயனின் ஓவர்களில் மட்டும் 3 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். இதற்கிடையே அங்கித் பாவ்னே 25 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னிலும் (57 பந்து, 2 பவுண்டரி) வேகப்பந்து வீச்சாளர் ஜாக்சன் பேர்டுவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் 85 ரன்

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய ஏ அணி 51 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்துள்ளது. 22 வயதான ஸ்ரோஸ் அய்யர் 85 ரன்களுடனும் (93 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), 19 வயதான ரிஷாப் பான்ட் 3 ரன்னுடனும் களத்தில் நிற்கிறார்கள்.

இந்திய ‘ஏ’ அணி இன்னும் 293 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


Next Story