ஒரு நாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா


ஒரு நாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 19 Feb 2017 7:09 PM GMT (Updated: 19 Feb 2017 7:09 PM GMT)

நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது.

ஹாமில்டன்,

நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. மழையால் 3 மணி நேரத்திற்கு மேலாக பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 207 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 59 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு அம்லாவும்(35 ரன்), குயின்டான் டி காக்கும் (69 ரன்) நல்ல தொடக்கம் உருவாக்கி தந்தனர். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி இந்த ஓவரை வீசினார். இதில் பெலக்வாயோ ஒரு சிக்சரும், கேப்டன் டிவில்லியர்ஸ் ஒரு பவுண்டரியும் அடிக்க தென்ஆப்பிரிக்க அணி 33.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 37 ரன்களுடனும் (34 பந்து, 3 பவுண்டரி), பெலக்வாயோ 29 ரன்களுடனும் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 12–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் தனது முந்தைய சாதனையை (2005–ம் ஆண்டில் தொடர்ந்து 12 வெற்றி) சமன் செய்தது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது ஆட்டம் கிறைஸ்ட்சர்சில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story