ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2–வது ஆட்டத்திலும் இலங்கை ‘திரில்’ வெற்றி தொடரையும் கைப்பற்றியது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2–வது ஆட்டத்திலும் இலங்கை ‘திரில்’ வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 19 Feb 2017 7:11 PM GMT (Updated: 19 Feb 2017 7:11 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கீலாங்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

20 ஓவர் கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 2–வது 20 ஓவர் போட்டி கீலாங்கில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை, முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. ஹென்ரிக்ஸ் 56 ரன்களும், மைக்கேல் கிளைஞ்சர் 43 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் புகுந்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் கேப்டன் தரங்கா (4 ரன்), டிக்வெலா (14 ரன்) உள்பட 5 விக்கெட்டுகளை 40 ரன்னுக்குள் (4.3 ஓவர்) இழந்து பரிதவித்தது.

இந்த சூழலில் அசெலா குணரத்னே தாக்குப்பிடித்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். அவருக்கு கபுகேதரா (32 ரன்) ஒத்துழைப்பு தந்தார். ஹென்ரிக்ஸ் வீசிய 19–வது ஓவரில் குணரத்னே ‘ஹாட்ரிக்’ சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உள்பட 22 ரன்கள் திரட்ட ஆட்டம் இலங்கை பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

இலங்கை வெற்றி

பரபரப்பான 20–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை வீசினார். இதன் முதல் பந்தில் குலசேகரா (12 ரன்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் குணரத்னே, பவுண்டரி, சிக்சர் அடிக்க அடுத்த 4 பந்துகளில் 12 ரன்கள் வந்தது. இறுதி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட குணரத்னே பந்தை பவுண்டரிக்கு விரட்ட, ஆஸ்திரேலியா அதிர்ச்சியில் உறைந்து போனது. இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. குணரத்னே 84 ரன்களுடன்(46 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.

முதலாவது ஆட்டத்திலும் இதே போன்று தான் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இலங்கை வெற்றி பெற்றிருந்தது. அதிலும் குணரத்னே தான் அரைசதம் அடித்து ஹீரோவாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் தொடரை 2–0 என்ற கணக்கில் இலங்கை அணி தனதாக்கி சாதனை படைத்தது. கடைசி ஆட்டம் அடிலெய்டில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story