ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடி நீக்கம் புதிய கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்


ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடி நீக்கம் புதிய கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்
x
தினத்தந்தி 19 Feb 2017 8:00 PM GMT (Updated: 19 Feb 2017 7:25 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இனி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அந்த அணியை வழிநடத்த இருக்கிறார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இனி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அந்த அணியை வழிநடத்த இருக்கிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்

இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அணியின் முக்கிய நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது அம்பலமானதால், முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இதை ஈடுகட்டும் வகையில் கடந்த ஆண்டு குஜராத் லயன்ஸ், புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகள் உதயமாகின. சென்னை, ராஜஸ்தான் அணிகளில் அங்கம் வகித்த வீரர்களில் பெரும்பாலானோர் புதிய அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர்.

டோனி நீக்கம்

புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக அனுபவ வீரர் மகேந்திர சிங் டோனி நியமிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்சின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த டோனியால், புனே அணியில் சாதிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு புனே அணி 14 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 9 தோல்வியுடன் அடுத்த சுற்றை வாய்ப்பை இழந்து வெளியேறியது. பங்கேற்ற 8 அணிகளில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் 7–வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், அந்த அணி நிர்வாகம் அதிருப்திக்குள்ளானது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் தலைமையில் லீக்குடன் ஒரு அணி நடையை கட்டியது அதுவே முதல் முறையாகும். அவர் தனது பங்குக்கு 12 இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும் அவரது கேப்டன்ஷிப்பில் முன்பிருந்த வேகம், சாதுர்யம் இல்லை என்றெல்லாமல் சரமாரி விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந்தேதி தொடங்க உள்ள நிலையில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி நேற்று தடாலடியாக நீக்கப்பட்டார்.

விளக்கம்

இது குறித்து புனே அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா கூறுகையில், ‘டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து தானாக விலகவில்லை. நாங்கள் அவரை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தை நியமித்து இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த சீசன் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. எனவே 10–வது ஐ.பி.எல். போட்டிக்கு இளம் வீரர் யாரையாவது கேப்டன் பதவியில் அமர்த்தலாம் என்று விரும்பினோம். அதை செய்திருக்கிறோம்.

ஒரு தலைவராகவும், ஒரு நபராகவும் டோனி மீது எனக்கு மிகுந்த மதிப்பு, மரியாதை உண்டு. கேப்டன் பதவி இல்லாவிட்டாலும் ஒரு வீரராக புனே அணியில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார். அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு டோனி ஆதரவு தெரிவித்து இருக்கிறார்’ என்றார்.

கேப்டன் பதவியில் சாதனைகள்

35 வயதான டோனி இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஏற்கனவே 2014–ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து ஐ.பி.எல். கேப்டன் பொறுப்பு மட்டுமே அவரது வசம் ஒட்டிக்கொண்டு இருந்தது. அதுவும் இப்போது பறிபோய் விட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் என்று இதுவரை 143 ஆட்டங்களுக்கு டோனி கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டவர் இவர் தான். கேப்டன்ஷிப்பில் அவர் 83 வெற்றி, 59 தோல்வி கண்டுள்ளார். ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011–ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையையும், 2010 மற்றும் 2014–ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்று மகத்தான சாதனை படைத்தது.

இந்த ஆண்டு வேண்டுமென்றால் டோனி கேப்டன் பதவியின்றி முதல் முறையாக ஒரு வீரராக மட்டும் களம் இறங்கலாம். ஆனால் 2018–ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல்.–ல் அடியெடுத்து வைக்கும் போது அவரை தேடி கேப்டன் பதவி செல்லலாம்.

ஒப்பந்த தொகை

புனே அணியில் டோனி ரூ.12½ கோடிக்கும், ஸ்டீவன் சுமித் ரூ.5½ கோடிக்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். 27 வயதான ஸ்டீவன் சுமித் ஏற்கனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடிய போது 9 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.


Next Story