பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: இந்திய அணி ‘சாம்பியன்’


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: இந்திய அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 21 Feb 2017 11:00 PM GMT (Updated: 21 Feb 2017 9:05 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கொழும்பு

மிதாலிராஜ் இல்லை

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் ஜூன்-ஜூலை மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஏற்கனவே 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடந்து வந்தது.

இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. காயம் காரணமாக இந்திய கேப்டன் மிதாலிராஜ் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

245 ரன்கள் இலக்கு

49.4 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 244 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக மிக்னன் டு பிரீஸ் 40 ரன்னும், லிஜிலே லீ 37 ரன்னும், கேப்டன் வான் நிகெர்க் 37 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும், எக்தா பிஸ்ட், பூனம் யாதவ், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் திருஷ் காமினி 10 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் தீப்தி ஷர்மா, மோனா மீஷ்ரமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தீப்தி ஷர்மா 71 ரன்னிலும் (89 பந்து, 8 பவுண்டரி), மீஷ்ரம் 59 ரன்னிலும் (82 பந்து 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்தடுத்து வெளியேறினர். வேதா கிருஷ்ணமூர்த்தி தனது பங்குக்கு 31 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி ‘திரில்’ வெற்றி

இதன் பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் நடையை கட்டினாலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்பை உணர்ந்து ஆடி அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மார்சியா லெட்சோலோ வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன் எடுத்து விட்டு, 2-வது ரன்னுக்கு ஓடுகையில், எதிர்முனையில் நின்ற பூனம் யாதவ் (7 ரன்) ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். 2-வது, 3-வது, 4-வது பந்துகளில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் களத்தில் பரபரப்பு மேலும் அதிகமானது. 5-வது பந்தை ஹர்மன்பிரீத் கவுர் சிக்சருக்கு தூக்கினார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்தது.

உச்சக்கட்ட பதற்றத்துக்கு மத்தியில் கடைசி பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் கச்சிதமாக 2 ரன்கள் சேகரித்து இலக்கை எட்ட வைத்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கியது. ஹர்மன்பிரீத் கவுர் 41 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 ரன்னும், ராஜேஸ்வரி கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

உலக கோப்பை போட்டிக்கு தகுதி

இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி, ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 13-வது வெற்றி இதுவாகும். இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருதையும், தென்ஆப்பிரிக்க வீராங்கனை சன் லுஸ் தொடர்நாயகி விருதையும் பெற்றனர். இந்த போட்டியில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

Next Story