தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: ராஸ் டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: ராஸ் டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 22 Feb 2017 11:15 PM GMT (Updated: 22 Feb 2017 7:37 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ராஸ் டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறைஸ்ட்சர்ச்,

2–வது ஒருநாள் போட்டி

தென்ஆப்பிரிக்கா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் 2 ரன்னிலும், பிரவுன்லி 34 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

ராஸ் டெய்லர் சதம்

3–வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர், கேப்டன் கனே வில்லியம்சுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 157 ரன்னாக உயர்ந்த போது கனே வில்லியம்சன் (69 ரன், 75 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் அவுட் ஆனார். 3–வது விக்கெட்டுக்கு கனே வில்லியம்சன்–டெய்லர் இணை 104 ரன்கள் சேர்த்தது.

அதன் பிறகு களம் கண்ட நீல் புரூம் 2 ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய ஜேம்ஸ் நீ‌ஷம் அதிரடியாக ஆடினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது. கடைசி பந்தில் பவுண்டரி விளாசி சதத்தை எட்டிய ராஸ் டெய்லர் 110 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 102 ரன்னும், ஜேம்ஸ் நீ‌ஷம் 57 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 71 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிடோரியஸ் 2 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், பார்னல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நியூசிலாந்து அணி வெற்றி

பின்னர் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கட்டுப்கோப்பாக பந்து வீசிய டிம் சவுதி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 57 ரன்னும், பிரிடோரியஸ் 50 ரன்னும், கேப்டன் டிவில்லியர்ஸ் 45 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் 2 விக்கெட்டும், டிம் சவுதி, கிரான்ட்ஹோம்ப், சோதி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

அடுத்த ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–1 என்ற கணக்கில் சமநிலை கண்டுள்ளது. நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். தென்ஆப்பிரிக்கா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் வருகிற 25–ந் தேதி நடக்கிறது.

17–வது சதம் அடித்து ராஸ் டெய்லர் சாதனை

* ராஸ் டெய்லர் நேற்று தனது 17–வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் நாதன் ஆஸ்ட்லேவை (16 சதம்) பின்னுக்கு தள்ளி விட்டு ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் தனதாக்கினார். அத்துடன் ஒருநாள் போட்டியில் முழு உறுப்பு நாடு அணிகள் அனைத்துக்கும் (டெஸ்ட் அந்தஸ்து பெற்றவை) எதிராக சதம் அடித்த 6–வது வீரர் என்ற பெருமையையும் ராஸ் டெய்லர் பெற்றார். ஏற்கனவே ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), தெண்டுல்கர் (இந்தியா), ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), விராட்கோலி (இந்தியா) ஆகியோர் எல்லா அணிகளுக்கும் எதிராக சதம் கண்டு இருக்கின்றனர்.

* நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் அரை சதத்தை கடந்ததும் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்தார். 180 ஒருநாள் போட்டியில் ஆடிய ராஸ் டெய்லர் மொத்தம் 6,052 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்தவர்களில் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 8,007 ரன்னும், நாதன் ஆஸ்ட்லே 7,090 ரன்னும், பிரன்டன் மெக்கல்லம் 6,083 ரன்னும் குவித்து முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 12 வெற்றிகளை குவித்த தென்ஆப்பிரிக்க அணியின் வீறுநடைக்கு நியூசிலாந்து அணி நேற்று முட்டுக்கட்டை போட்டது. கடந்த ஆண்டில் பிரிட்ஜ்டவுனில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வி கண்டு இருந்தது. அதன் பிறகு சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.


Next Story