பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பாதியில் வெளியேறியது ஏன்? ரென்ஷா விளக்கம்


பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பாதியில் வெளியேறியது ஏன்? ரென்ஷா விளக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2017 11:30 PM GMT (Updated: 23 Feb 2017 7:18 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ரென்ஷா 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வயிற்று உபாதை காரணமாக பாதியில் வெளியேறினார்.

புனே,

 பிறகு 4–வது விக்கெட்டுக்கு மீண்டும் இறங்கி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். இந்த சம்பவம் குறித்து 20 வயதான ரென்ஷா கூறியதாவது:–

வார்னர் ஆட்டம் இழப்பதற்கு 5 அல்லது 10 நிமிடங்களுக்கு முன்பு திடீரென வயிற்றை கலக்கியது. உடனே நடுவர் கெட்டில் போரப்பிடம் உணவு இடைவேளைக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கேட்டேன். அரைமணி நேரம் இருப்பதாக கூறினார்.

என்னால் சமாளிக்க முடியவில்லை. சங்கடத்தில் நெளிந்தேன். இப்படியொரு நிலைமை வந்து விட்டதே என்று எனக்கு நானே நொந்து கொண்டேன். உடல்நலக்குறைவால் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேற முடியுமா? அதற்கு விதி அனுமதி உண்டா? என்பது தெரியவில்லை. எனது பிரச்சினையை கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் கூறினேன். அதை கேட்டு அவர் ஆச்சரியப்படவில்லை. நிலைமையை புரிந்து கொண்டார். கழிவறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது, சென்று தானே ஆக வேண்டும் என்று கூறினார். இதன்பின்னர் நடுவரிடம் பேசினோம்.

ஆனால் இது ஒரு சரியான சூழ்நிலை கிடையாது. வாழ்க்கையில் இப்படியும் நடக்கத்தான் செய்யும். அப்போது தான் நாங்கள் ஒரு விக்கெட்டை இழந்திருந்தோம். நானும் வெளியேறும் போது, இரண்டு புதிய பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க வேண்டிய கடினமான சூழலை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் வேறு வழியில்லை என்பதை கேப்டன் ஸ்டீவன் சுமித் உணர்ந்து கொண்டார். இதையடுத்து வெளியேறினேன்.

இவ்வாறு ரென்ஷா கூறினார்.

ரென்ஷா பாதியிலேயே கழிவறைக்கு ஓடியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறுகையில், ‘கிரிக்கெட்டில் இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தை நான் பார்த்ததாக நினைவில்லை. அவருக்கு கொஞ்சம் வயிற்று கோளாறு இருந்தது உண்மை தான். டேவிட் வார்னர் ஆட்டம் இழந்ததும், அந்த சூழ்நிலையை களத்தை விட்டு வெளியேறி கழிவறைக்கு செல்வதற்கு பயன்படுத்திக்கொண்டதாக கருதுகிறேன். ஒரு வேளை வார்னர் அவுட் ஆகியிருக்காவிட்டால், அது பற்றி (ரிட்டயர்ட்ஹர்ட்) அவர் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்’ என்றார்.


Next Story