இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல் 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது


இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல் 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது
x
தினத்தந்தி 24 Feb 2017 12:15 AM GMT (Updated: 23 Feb 2017 7:51 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 256 ரன்களுடன் திணறிக்கொண்டிருக்கிறது.

புனே,

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி டேவிட் வார்னரும், மேத்யூ ரென்ஷாவும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, கவாஸ்கர், ஷேன் வார்னே உள்ளிட்டோர், ‘ஆடுகளத் தன்மையை பார்க்கும் போது முதல் நாளில் பேட் செய்வது நிச்சயம் சிரமம்’ என்று ஆரூடம் கூறினர். அதனால் வார்னரும், ரென்ஷாவும் மிகவும் எச்சரிக்கையுடன் பந்து வீச்சை எதிர்கொண்டனர்.

கணிப்புப்படியே, ஆடுகளத்தில் தொடக்கத்தில் இருந்தே பந்து சுழன்று திரும்பியதுடன், நன்கு எகிறவும் செய்தது. அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி இடைவிடாது தாக்குதலை தொடுத்தது. வார்னர், பெரும்பாலும் அஸ்வினின் பந்து வீச்சில் தடவினார். இருப்பினும் இருவரும் சமாளித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

வார்னர் 20 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, ஜெயந்த் யாதவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். ஆனால் ஜெயந்த் யாதவ், தனது காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ–பாலாக வீசியது தெரிய வந்ததால் அதிர்ஷ்டவசமாக வார்னர் தப்பினார்.

மாற்றம் தந்த உமேஷ்

பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்த கேப்டன் விராட் கோலி 28–வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை பந்து வீச அழைத்தார். அதற்கு உடனடி பலனும் கிட்டியது. அவரது பந்தில் வார்னர் (38 ரன், 77 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். பந்து வார்னரின் பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் திரட்டியது.

அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார். உறுதிமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய ரென்ஷா (36 ரன்னில் இருந்த போது) அதே ஓவரில் வயிற்று கோளாறால் பாதிக்கப்பட்டு ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேற, ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து ஷான் மார்ஷ் இறக்கப்பட்டார்.

சுமித் 27 ரன்

பந்து கொஞ்சம் பழசானதும், ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகியது. ஆடுகளம் சுழலுக்கு உகந்ததாக காணப்பட்டாலும், இத்தகைய நிலையிலும் வேகப்பந்து வீச்சாளரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உமேஷ் யாதவ் நிரூபித்து காண்பித்தார்.

மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசியதுடன், துல்லியமாக ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்து ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தார். மறுபக்கம் சுழற்பந்து வீச்சாளர்களும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்தனர்.

ஷான் மார்ஷ் 16 ரன்னிலும், அடுத்து வந்த ஹேன்ட்ஸ்கோம்ப் 22 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். தடுப்பாட்டத்தில் தீவிர கவனம் செலுத்திய கேப்டன் ஸ்டீவன் சுமித் 27 ரன்கள் (95 பந்து, 2 பவுண்டரி) எடுத்திருந்த போது, அஸ்வின் பந்துவீச்சில் இறங்கி வந்து அடித்த போது, அது ‘மிட்விக்கெட்’ திசையில் நின்ற இந்திய கேப்டன் கோலியில் கையில் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதற்கிடையே வயிற்றுக்கோளால் வெளியேறியிருந்த ரென்ஷா மீண்டும் உள்ளே வந்தார். அரைசதத்தை கடந்த அவர் (68 ரன், 156 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் ‘ஸ்லிப்’பில் நின்ற விஜயிடம் கேட்ச் ஆனார். உமேஷ் யாதவ், மேலும் 3 விக்கெட்டுகளை கபளீகரம் செய்ய ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. கடைசி 56 ரன்களுக்கு அந்த அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஸ்டார்க் அதிரடி

205 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்ததால் அந்த அணியின் இன்னிங்ஸ் சிறிது நேரத்தில் முடிவுக்கு வந்து விடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென மிட்செல் ஸ்டார்க் விசுவரூபம் எடுக்க, போக்கு மாறியது. அஸ்வின், ஜெயந்த் யாதவின் ஓவர்களில் சிக்சர் பறக்க விட்ட ஸ்டார்க் ஜடேஜாவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி மிரள வைத்தார்.

அவரது கடைசிகட்ட அதிரடி ஆஸ்திரேலியாவை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றியது. பவுண்டரி அடித்து தனது 9–வது அரைசதத்தை பூர்த்தி செய்த ஸ்டார்க், டெஸ்டில் ஆயிரம் ரன்களையும் கடந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 94 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டார்க் 57 ரன்களுடனும் (58 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹேசில்வுட் ஒரு ரன்னுடனும் (31 பந்து) களத்தில் உள்ளனர்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா

ரென்ஷா (சி) விஜய் (பி) அஸ்வின் 68

வார்னர் (சி) உமேஷ் யாதவ் 38

ஸ்டீவன் சுமித் (சி) கோலி (பி) அஸ்வின் 27

ஷான் மார்ஷ் (சி) கோலி (பி) ஜெயந்த் 16

ஹேன்ட்ஸ்கோம்ப் எல்.பி.டபிள்யூ (பி) ஜடேஜா 22

மிட்செல் மார்ஷ் எல்.பி.டபிள்யூ (பி) ஜடேஜா 4

மேத்யூ வேட் எல்.பி.டபிள்யூ (பி) உமேஷ் 8

மிட்செல் ஸ்டார்க் (நாட்–அவுட்) 57

ஸ்டீவ் ஓ கீபே (சி) சஹா (பி) உமேஷ் 0

நாதன் லயன் எல்.பி.டபிள்யூ (பி) உமேஷ் 0

ஹேசில்வுட் (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 15

மொத்தம் (94 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு) 256

விக்கெட் வீழ்ச்சி: 1–82, 2–119, 3–149, 4–149, 5–166, 6–190, 7–196, 8–205, 9–205

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ‌ஷர்மா 11–0–27–0

அஸ்வின் 34–10–59–2

ஜெயந்த் யாதவ் 13–1–58–1

ரவீந்திர ஜடேஜா 24–4–74–2

உமேஷ் யாதவ் 12–3–32–4


Next Story