‘ஒரே ஒரு நாள் மோசமாக அமைந்து விட்டது’– கும்பிளே


‘ஒரே ஒரு நாள் மோசமாக அமைந்து விட்டது’– கும்பிளே
x
தினத்தந்தி 24 Feb 2017 11:15 PM GMT (Updated: 24 Feb 2017 7:39 PM GMT)

2–வது நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே கூறியதாவது:–

புனே,

நீங்கள் (நிருபர்கள்) கூறியது போல் ஒரே ஒரு நாள் மோசமாக அமைந்துவிட்டது. ராகுலும், ரஹானேவும் களத்தில் நின்ற போது, ஓரளவு நல்ல நிலையில் இருந்தோம். ராகுல் அவுட் ஆனதும், அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இதில் சில வீரர்கள் மிக சாதாரணமாக விக்கெட்டுகளை இழந்து விட்டனர். நிச்சயம் இந்த ஆடுகளம் சவால் மிக்கதே. எனவே 2–வது இன்னிங்சில் இன்னும் கட்டுப்பாட்டோடு ஆட வேண்டியது முக்கியம்.

இது போன்ற ஆடுகளத்தில் முதலில் அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதில் தான் கோட்டை விட்டு விட்டோம். முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் 80 ரன்களையும், கடைசி விக்கெட்டுக்கு 60 ரன்களையும் விட்டுக்கொடுத்ததால் நாங்கள் விரும்பியபடி ஆஸ்திரேலியாவை சீக்கிரம் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இங்கு ஆக்ரோ‌ஷமாகவும், அதே சமயம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும். ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப ஷாட்டுகளை தொடுக்க வேண்டும்.

மொத்தத்தில் இது எங்களுக்குரிய நாள் அல்ல. ஆஸ்திரேலிய பவுலர்களை நாம் பாராட்டியாக வேண்டும். நாளை (இன்று) மீதமுள்ள 6 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பதில் கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு கும்பிளே கூறினார்.

இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபே கூறும் போது, ‘எனது முதல் 9 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்தேன். விக்கெட் கிடைக்கவில்லை. குறிப்பாக முதல் 6 ஓவர்களில் நன்றாக பந்து வீசவில்லை. ஆனாலும் எல்லாமே வெகு சீக்கிரம் மாறி விட்டது. நாங்கள் விளையாடிய போது, பேட்டில் உரசாமல் நழுவிய பந்துகள் எல்லாம் அவர்களுக்கு பேட்டில் பட்டு கேட்ச்சாக மாறியது. மொத்தத்தில் இது எங்களுக்கு நல்ல நாளாக அமைந்தது. 2–வது இன்னிங்சில் பேட்ஸ்மேன்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்’ என்றார்.


Next Story