முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி சிதைந்தது இந்தியா 105 ரன்களுக்கு ஆல்–அவுட்


முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி சிதைந்தது இந்தியா 105 ரன்களுக்கு ஆல்–அவுட்
x
தினத்தந்தி 25 Feb 2017 12:15 AM GMT (Updated: 24 Feb 2017 8:12 PM GMT)

புனேயில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி சிதைந்த இந்திய அணி 105 ரன்களுக்கு சுருண்டது.

புனே,

புனே டெஸ்ட்

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் ஸ்டார்க் 57 ரன்களுடனும், ஹேசில்வுட் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அஸ்வின் வீசிய முதல் ஓவரின் 2–வது பந்தில் பவுண்டரி அடித்த மிட்செல் ஸ்டார்க் (61 ரன், 63 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) 5–வது பந்தில் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது.

கோலி டக்–அவுட்

இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளிவிஜயும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். ஏமாற்றம் அளித்த விஜய் 10 ரன்களில் (19 பந்து) ஹேசில்வுட்டின் பந்தில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் சிக்கினார். அடுத்து வந்த புஜாராவும் (6 ரன்) நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய கொஞ்சம் எழும்பி வந்த பந்து புஜாராவின் (6 ரன்) கையுறையை உரசியபடி விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

3–வது விக்கெட்டுக்கு ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி அடியெடுத்து வைத்தார். துரதிர்ஷ்டவசமாக அவரும் ஆஸ்திரேலிய வகுத்த வியூக வலையில் சிக்கிக்கொண்டார். அதே ஓவரில், மிட்செல் ஸ்டார்க் மிகவும் வெளியே வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து ஸ்லிப்பில் நின்ற ஹேன்ட்ஸ்கோம்ப்பிடம் கோலி கேட்ச் ஆகி நடையை கட்டினார். ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பே கோலி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒரே ஓவரில் 3 விக்கெட்

இதன் பின்னர் லோகேஷ் ராகுலுடன் ரஹானே கைகோர்த்தார். இவர்கள் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ராகுல் தனது 2–வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

அணியின் ஸ்கோர் 94 ரன்களாக உயர்ந்த போது (32.2 ஓவர்) சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபேயின் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் (64 ரன், 97 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சச்) சில அடி தூரம் இறங்கி வந்து சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆனார். அவரது விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்பு முனையாகும்.

இருப்பினும் அடுத்த 35 நிமிடங்களில் இந்தியாவின் இன்னிங்சே முடிவுக்கு வந்து விடும் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள். கீபேயின் அதே ஓவரில் ரஹானே (13 ரன், 55 பந்து, ஒரு பவுண்டரி), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா(0) இருவரும் ஸ்லிப் பகுதியில் பிடிபட்டார்கள்.

இந்தியா 105 ரன்

இந்திய அணி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து ஊசலாட, ஆஸ்திரேலியாவின் கை முழுமையாக ஓங்கியது. ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதால் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திண்டாடினர். நாதன் லயனின் சுழலில் அஸ்வின் (0) வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார். அதாவது பேட்டில் பட்ட பந்து, அதன் பிறகு அவரது கால்பாதத்தில் விழுந்து அருகில் நின்ற ஹேன்ட்ஸ்கோம்பின் கையில் சிக்கியது. ரீப்ளேயில், பந்து தரையில் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. 8 பந்து இடைவெளியில் 4 முன்னணி தலைகள் உருண்டதால் இந்திய அணி மீள முடியாமல் ஒட்டுமொத்தமாக ‘சரண்’ அடைந்தது.

எஞ்சிய விக்கெட்டுகளையும் ஸ்டீவ் ஓ கீபே கபளீகரம் செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.1 ஓவர்களில் 105 ரன்களில் சுருண்டது. விஜய், ராகுல், ரஹானே தவிர இந்திய அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. கடைசி 7 விக்கெட்டுகளை இந்திய அணி வெறும் 11 ரன்களில் பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டீவ் ஓ கீபே 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

சுழல் ஆடுகளத்தால் பாதிப்பு

தொடர்ந்து மூன்று இன்னிங்சில் 600 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்த நம்பர் ஒன் அணியான இந்தியா இந்த டெஸ்டில் ஆடிய விதம் உண்மையிலேயே ரசிகர்களை எரிச்சலடைய வைத்து விட்டது.

பொதுவாக இந்திய ஆடுகளங்களில் 3–வது நாளின் பிற்பகுதியில் இருந்து சுழற்பந்து வீச்சு எடுபடும். ஆனால் ஆஸ்திரேலியாவை நசுக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, இந்த ஆடுகளம் முதல் நாளில் இருந்தே பயங்கரமாக சுழலும் வகையில் தயாரிக்கப்பட்டது. அது கடைசியில் நமது வீரர்களுக்கே உலைவைத்து விட்டது.

பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆஸ்திரேலியா ஆடியது. அஸ்வின் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய வார்னர் (10 ரன்) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஷான் மார்சையும் (0) அஸ்வின் காலி செய்தார்.

இதன் பிறகு கேப்டன் ஸ்டீவன் சுமித் களம் இறங்கி, உறுதிமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை காப்பாற்றினார். மறுபக்கம் ஹேன்ட்ஸ்கோம்ப் (19 ரன்), ரென்ஷா (31 ரன்) பெவிலியன் திரும்பினாலும், ஸ்டீவன் சுமித்தின் ஆதிக்கத்திற்கு இந்திய பவுலர்களால் தடுக்க முடியவில்லை.

வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

2–வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டீவன் சுமித் 59 ரன்களுடனும் (117 பந்து, 7 பவுண்டரி), மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடனும் (48 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நிற்கிறார்கள்.

இதுவரை ஆஸ்திரேலியா 298 ரன்கள் முன்னிலை பெற்று மிக வலுவான நிலையில் இருக்கிறது. 2004–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பம் அந்த அணிக்கு இப்போது கனிந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 15 விக்கெட்டுகள் சரிந்ததால், இந்த டெஸ்டில் 4–வது நாளிலேயே முடிவு கிடைத்து விட வாய்ப்புள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் எதிரணிக்கு 150 ரன்களுக்கு மேல் முன்னிலை வழங்கிய போட்டிகளில் இதுவரை இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இரண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே நிகழ்ந்துள்ளது. 1981–ம் ஆண்டு மெல்போர்னிலும், 2001–ம் ஆண்டு கொல்கத்தாவிலும் 182 ரன், 274 ரன்கள் வீதம் பின்தங்கி, அதன் பிறகு எழுச்சியுடன் வெற்றி பெற்றது. அது போன்றே ஒரு மாயாஜாலத்தை இந்திய அணி புனே டெஸ்டிலும் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

3–வதுநாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா 260

இந்தியா

விஜய் (சி) வேட் (பி) ஹேசில்வுட் 10

ராகுல் (சி) வார்னர் (பி) ஓ கீபே 64

புஜாரா(சி) வேட் (பி) ஸ்டார்க் 6

கோலி (சி) ஹேன்ட்ஸ்கோம்ப் (பி) ஸ்டார்க் 0

ரஹானே (சி) ஹேன்ட்ஸ்கோம்ப் (பி) ஓ கீபே 13

அஸ்வின் (சி) ஹேன்ட்ஸ்கோம்ப் (பி) லயன் 1

விருத்திமான் சஹா (சி) சுமித் (பி) ஓ கீபே 0

ஜடேஜா (சி) ஸ்டார்க் (பி) ஓ கீபே 2

ஜெயந்த் யாதவ் (ஸ்டம்பிங்) வேட் (பி) ஓ கீபே 2

உமேஷ் யாதவ் (சி) சுமித் (பி) ஓ கீபே 4

இஷாந்த் ‌ஷர்மா (நாட்–அவுட்) 2

எக்ஸ்டிரா 1

மொத்தம் (40.1 ஓவர்களில் ஆல்–அவுட்) 105

விக்கெட் வீழ்ச்சி: 1–26, 2–44, 3–44, 4–94, 5–95, 6–95, 7–95, 8–98, 9–101

பந்து வீச்சு விவரம்

மிட்செல் ஸ்டார்க் 9–2–38–2

ஸ்டீவ் ஓ கீபே 13.1–2–35–6

ஹேசில்வுட் 7–3–11–1

நாதன் லயன் 11–2–21–1

2–வது இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா

வார்னர் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 10

ஷான் மார்ஷ் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 0

ஸ்டீவன் சுமித் (நாட்–அவுட்) 59

ஹேன்ட்ஸ்கோம்ப் (சி) விஜய் (பி) அஸ்வின் 19

ரென்ஷா (சி) இஷாந்த் (பி) ஜெயந்த் 31

மிட்செல் மார்ஷ் (நாட்–அவுட்) 21

எக்ஸ்டிரா 3

மொத்தம் (46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 143

விக்கெட் வீழ்ச்சி: 1–10, 2–23, 3–61, 4–113

பந்து வீச்சு விவரம்

அஸ்வின் 16–3–68–3

ஜடேஜா 17–6–26–0

உமேஷ் யாதவ் 5–0–13–0

ஜெயந்த் யாதவ் 5–0–27–1

இஷாந்த் ‌ஷர்மா 3–0–6–0

11 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்த இந்தியா

*இந்த டெஸ்டில் 3 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்த 48 பந்துகள் இடைவெளியில் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்து 105 ரன்களில் முடங்கிப்போனது. அதாவது இந்திய அணி 11 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்துள்ளது. கடைசி 7 விக்கெட்டுகளை வேகமாக இழந்ததில் இந்தியாவின் மோசமான நிலைகுலைவு இது தான். இதற்கு முன்பு 1990–ம் ஆண்டு கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 18 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்ததே மோசமான விக்கெட் வீழ்ச்சியாக இருந்தது.

*சொந்த மண்ணில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் (105 ரன்) இதுவாகும். கடைசியாக இதைவிட குறைவாக 2008–ம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்களில் சுருண்டு இருந்தது.

*ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் 5–வது குறைந்த ஸ்கோராக இது பதிவானது. ஏற்கனவே 58 (பிரிஸ்பேன், 1947), 67 (மெல்போர்ன், 1948), 98 (பிரிஸ்பேன், 1947), 104 (2004, மும்பை) ஆகிய ரன்களில் இந்தியா ஆட்டம் இழந்திருக்கிறது.

*இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ‘தண்ணி’ காட்டிய ஆஸ்திரேலிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் 32 வயதான ஸ்டீவ் ஓ கீபே 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். தனது 5–வது டெஸ்டில் ஆடும் ஸ்டீவ் ஓ கீபே இதற்கு முன்பு இன்னிங்சில் 4 விக்கெட் கூட எடுத்தது கிடையாது. இந்திய மண்ணில் வெளிநாட்டு இடக்கை சுழற்பந்து வீச்சாளரின் 3–வது அசத்தல் பந்து வீச்சாக இது அமைந்தது. முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஹெட்லி வெரிடி 7/49 (சென்னை, 1934), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் 6/9 (2004, முமபை) ஆகியோர் உள்ளனர்.

*இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்டில் ‘டக்–அவுட்’ ஆகியிருப்பது இது 5–வது நிகழ்வாகும். சொந்த மண்ணில் அவர் ரன்னின்றி வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

*ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் இந்திய மண்ணில் நேற்று ஆயிரம் ரன்களை கடந்தார். இங்கு 7–வது டெஸ்டில் விளையாடும் அவர் 4 சதம், 4 அரைசதம் உள்பட இதுவரை 1,016 ரன்கள் (சராசரி 92.36) எடுத்துள்ளார்.

*இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், 2–வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 2016–17–ம் ஆண்டு சீசனில் அவரது விக்கெட் எண்ணிக்கை 67 ஆக (10 டெஸ்ட்) உயர்ந்துள்ளது. அத்துடன் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அவர் 2–வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் 2007–08–ம் ஆண்டு சீசனில் 78 விக்கெட்டுகள் (12) வீழ்த்தி முதலிடம் வகிக்கிறார். இந்த சாதனை வரிசையில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 3–வது இடத்திலும் (1998–99–ம் ஆண்டில் 66 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே 4–வது இடத்திலும் (2004–05–ல் 64 விக்கெட்), கபில்தேவ் 5–வது இடத்திலும் (1979–80–ல் 63 விக்கெட்) உள்ளனர்.

ராகுல் காயம்

இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், 10–வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபேயின் பந்தில் சிக்சர் அடித்த போது, இடது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டார். பிறகு அணியின் பிசியோரெதபிஸ்ட் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார். தொடர்ந்து விளையாடிய அவருக்கு மீண்டும் அதே பாதிப்பு ஏற்பட்டது.

64 ரன்களில் இருந்த போது, ஸ்டீவ் ஓ கீபேயின் ஓவரில் பந்தை தூக்கியடித்தார். அது ‘லாங்ஆப்’ திசையில் நின்ற வார்னரின் கையில் கேட்ச்சாக விழுந்தது. இந்த ஷாட்டை அடித்த போது, தோள்பட்டை வலியால் அப்படியே உட்கார்ந்து விட்டார். வேதனையுடன் வெளியேறிய லோகேஷ் ராகுல் அடுத்த டெஸ்டில் ஆடுவது சந்தேகம் தான்.


Next Story