டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சை விவகாரம்: கேப்டன் விராட்கோலிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆதரவு


டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சை விவகாரம்:  கேப்டன் விராட்கோலிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆதரவு
x
தினத்தந்தி 13 March 2017 8:36 PM GMT (Updated: 13 March 2017 8:36 PM GMT)

டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சை விவகாரத்தில் இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் புனேவில் நடந்த முதலாவது டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பெற்றது. பெங்களூருவில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததாக நடுவர் அறிவித்தார். இதனை எதிர்த்து டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய ஸ்டீவன் சுமித் ஓய்வறையில் இருந்த வீரர்களை நோக்கி சைகை மூலம் உதவி கேட்டார். இதற்கு இந்திய அணி கேப்டன் விராட்கோலி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நடுவரிமும் முறையிட்டார். தன்னுடைய புத்தி அந்த நேரத்தில் மழுங்கி விட்டதால் அந்த மாதிரி செயல்பட்டு விட்டேன் என்று ஸ்டீவன் சுமித் தவறை ஒப்புக்கொண்டார்.

விராட்கோலிக்கு, ஹைடன் ஆதரவு

இந்த பிரச்சினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வரை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு சென்றது. ஆனால் ஸ்டீவன் சுமித் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று ஐ.சி.சி. அறிவித்தது. அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியமும் தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றது. இந்த பிரச்சினையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையே ஏற்பட்ட மோதலுடன் இரு நாட்டு முன்னாள் வீரர்களும் சரமாரியான கருத்து மோதலில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய பத்திரிகைகள் விராட்கோலியை கடுமையாக விமர்சித்தன. சமூக வலைதளங்களிலும் விராட்கோலிக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் இயான் ஹீலி, மிட்செல் ஜான்சன் ஆகியோர் இந்த தொடரில் ரன் எடுக்க முடியாததால் விரக்தியில் அதிகமாக எதிரணியினரை விராட்கோலி சிலெட்ஜிங் செய்து வருகின்றார் என்று குற்றம்சாட்டினார்கள்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் ஆகியோர் விராட்கோலியின் செயல்பாடுகள் சரியானது தான் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடனும் இணைந்துள்ளார். இது குறித்து ஹைடன் மும்பை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘நானும், விராட்கோலி கிரிக்கெட் ஆட்டத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எங்களது ஆக்ரோ‌ஷமான செயல்பாடு ஆட்டத்தில் ஒரு அங்கம் தான். அது சில நேரங்களில் அதிகமாகி விடுகிறது. அந்த மாதிரியான ஆக்ரோ‌ஷமும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது. ஸ்டீவன் சுமித்துக்கு எதிரான் டி.ஆர்.எஸ். அப்பீல் விவகாரத்தில் விராட்கோலி நடந்து கொண்டது சரிதான்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story