ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ‘இந்திய அணியின் ஆக்ரோ‌ஷத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ பயிற்சியாளர் கும்பிளே கருத்து


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ‘இந்திய அணியின் ஆக்ரோ‌ஷத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ பயிற்சியாளர் கும்பிளே கருத்து
x
தினத்தந்தி 14 March 2017 8:42 PM GMT (Updated: 14 March 2017 8:42 PM GMT)

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆக்ரோ‌ஷமான செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ என்று பயிற்சியாளர் கும்பிளே தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆக்ரோ‌ஷமான செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ என்று பயிற்சியாளர் கும்பிளே தெரிவித்துள்ளார்.

3–வது டெஸ்ட்

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால் தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று ராஞ்சியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

கும்பிளே பேட்டி

பயிற்சிக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளே அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணியினர் தனது இயல்பான உள்ளூணர்வின் படி செயல்படுவதை தடுக்க வேண்டியது இருப்பதாக நான் நினைக்கவில்லை. வீரர்கள் தங்களது எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி விளையாடலாம். ஆக்ரோ‌ஷமாக விளையாடுவது குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆட்டத்தை எதிர்கொள்வதில் ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட வழிமுறை இருக்கும்.

இது மிகவும் முக்கியமான போட்டி தொடர். இரு அணிகளும் சமநிலையில் இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சையில் வீரர்கள் தங்கள் பொறுப்பை உடனடியாக உணர்ந்து கொண்டார்கள். பிரச்சினையை விடுத்து ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியது தான் முக்கியமானதாகும். பெங்களூரு சம்பவத்தை மறந்து இரு அணியினரும் ஆட்டத்தில் கவனம் செலுத்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தது முதிர்ச்சியாக முடிவாகும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விராட்கோலி, ஸ்டீவன் சுமித் சந்தித்து பேசுவார்கள். டி.ஆர்.எஸ். சர்ச்சை மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் குறித்த விமர்சனங்களால் இந்திய அணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நாங்கள் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். ராஞ்சியில் முதல்முறையாக அரங்கேறும் சரித்திரம் வாய்ந்த டெஸ்ட் போட்டியில் டோனி இல்லாதது வித்தியாசமானது. அவர் போட்டியில் ஏதாவது ஒருநாளில் வந்து இந்திய அணி ஆடுவதை பார்ப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கும்பிளே கூறினார்.


Next Story