டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர், புஜாரா மேலும் பல சாதனைகளை படைத்தார்


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர், புஜாரா மேலும் பல சாதனைகளை படைத்தார்
x
தினத்தந்தி 19 March 2017 8:13 PM GMT (Updated: 19 March 2017 8:13 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்து வரும் 3–வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் புஜாரா 525 பந்துகளை சந்தித்து 202 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார்.

ஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்து வரும் 3–வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் புஜாரா 525 பந்துகளை சந்தித்து 202 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 2004–ம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ராகுல் டிராவிட் 270 ரன்கள் எடுத்த போது, அதில் 495 பந்துகளை சந்தித்து இருந்தார். அதுவே இந்தியர் எதிர்கொண்ட அதிகபட்ச பந்து எண்ணிக்கையாக இருந்தது. டிராவிட்டின் சாதனை இப்போது 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சாதனை வரிசையில் நவ்ஜோத் சிங் 3–வது இடத்திலும் (1997–ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 491 பந்தில் 201 ரன்), ரவிசாஸ்திரி (1992–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 477 பந்தில் 206 ரன்), சுனில் கவாஸ்கர் (1981–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 472 பந்தில் 172 ரன்) ஆகியோர் உள்ளனர்.

*உலக கிரிக்கெட் அரங்கில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக எப்போதும் திகழக்கூடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 500 பந்துகளுக்கு மேல் சமாளித்த 4–வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (3 முறை), லியோனர்ட் ஹட்டன், கென் பாரிங்டன் (தலா ஒரு முறை) ஆகியோர் ஏற்கனவே இந்த வகையில் ஆஸ்திரேலியாவை கலங்கடித்துள்ளனர். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 500 பந்துகளுக்கு மேல் சந்தித்தவர் கென் பாரிங்டன் ஆவார். இவர் 1964–ம் ஆண்டு அந்த அணிக்கு எதிராக ஓல்ட் டிராப்போர்டில் நடந்த டெஸ்டில் 624 பந்துகளை சந்தித்து 256 ரன்கள் எடுத்திருந்தார்.

*29 வயதான குஜராத்தை சேர்ந்த புஜாராவுக்கு இது 3–வது இரட்டை சதமாகும். ஏற்கனவே 2013–ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இரட்டை சதம் (204 ரன்) எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக இரட்டை சதம் நொறுக்கியவர்களில் முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (4 இரட்டை சதம்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (3) உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் கிரேமி பொல்லாக், இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் தலா இரண்டு இரட்டை சதம் அடித்து 3–வது இடத்தில் உள்ளனர். இவர்களுடன் புஜாராவும் இப்போது இணைந்துள்ளார்.

*புஜாரா மொத்தம் 668 நிமிடங்கள் களத்தில் நின்றார். இந்திய வீரர்களில் ஒரு இன்னிங்சில் அதிக நேரம் களத்தில் நின்றவர்களில் ராகுல் டிராவிட் (740 நிமிடம்) சுனில் கவாஸ்கர் (708 நிமிடம்), சித்து (673 நிமிடம்), கெய்க்வாட் (671 நிமிடம்) ஆகியோருக்கு பிறகு புஜாரா வருகிறார்.

*இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு இது 3–வது சதமாகும். டோனிக்கு(6) அடுத்து இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக சதம் அடித்தவர் இவர் தான்.

*இந்திய அணி இந்த இன்னிங்சில் 210 ஓவர்கள் விளையாடியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் நீண்ட இன்னிங்ஸ் இது தான். இதற்கு முன்பு 1985–ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த டெஸ்டில் 202 ஓவர்களை சந்தித்து இருந்தது. கடந்த 23 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 200 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்த ஒரே அணி இந்தியா தான்.

*ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபே 77 ஓவர்கள் பந்து வீசினார். இந்திய மண்ணில் ஒரு இன்னிங்சில் அதிக ஓவர்கள் பந்து வீசியவர்களில் 2–வது இடம் ஓ கீபேவுக்கு தான். 1961–ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தானின் ஹசீப் அசன் 84 ஓவர்கள் பவுலிங் செய்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.


Next Story