இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது


இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது
x
தினத்தந்தி 21 March 2017 12:15 AM GMT (Updated: 20 March 2017 7:26 PM GMT)

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையே ராஞ்சியில் நடந்த 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

ராஞ்சி,

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆட்டம் இழக்காமல் 178 ரன்னும், மேக்ஸ்வெல் 104 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 210 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக புஜாரா 202 ரன்னும், விருத்திமான் சஹா 117 ரன்னும் சேர்த்தனர். ரவீந்திர ஜடேஜா 54 ரன்களுடனும், இஷாந்த் ‌ஷர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டீன் ஓ கீபே 3 விக்கெட்டும், ஹேசில்வுட், நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

கடைசி நாள் ஆட்டம்

152 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4–வது நாள் ஆட்டம் முடிவில் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 14 ரன்னிலும், அடுத்து களம் கண்ட நாதன் லயன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ரவீந்திர ஜடேஜா சுழலில் போல்டு ஆனார்கள். ரென்ஷா 7 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ரென்ஷா, கேப்டன் ஸ்டீவன் சுமித்துடன் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். இந்திய அணி சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சை மாற்றி, மாற்றி தொடுத்தது. அதற்கு ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைத்தது.

இஷாந்த் ‌ஷர்மா மோதல்

29–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ரென்ஷா, சைடு ஸ்கிரீன் பகுதியில் தனது கவனத்தை திசைதிருப்பும் வகையில் யாரோ நடந்து சொல்வதை உணர்ந்து பேட் செய்யாமல் பின்நோக்கி நகர்ந்தார். இதனால் அந்த பந்து டெட் பால் என்று நடுவரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இஷாந்த் ‌ஷர்மா ஓடி வந்த வேகத்தில் வேண்டுமென்றே அந்த பந்தை வீசி விட்டார். ஸ்டம்பை விட்டு விலகி வீசிய அந்த பந்தை விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா பிடித்துக் கொண்டார்.

இதனால் ரென்ஷாவுக்கும், இஷாந்த் ‌ஷர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனர். இரு அணி கேப்டன்களும், நடுவரும் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள். அதன் பிறகு இஷாந்த் ‌ஷர்மா பந்து வீச்சில் அனல் பறந்தது. பவுன்சர் பந்து வீசி ரென்ஷாவை நிலைகுலையை வைத்ததுடன், பந்தால் அவரது தாடையையும் பதம் பார்த்தார். அதே ஓவரில் இஷாந்த் ‌ஷர்மா வீசிய 4–வது பந்தில் ரென்ஷா (15 ரன், 84 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஸ்டீவன் சுமித் 21 ரன்னில் அவுட்

அடுத்து களம் கண்ட ஷான் மார்ஷ் தான் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஸ்டீவன் சுமித் (21 ரன், 68 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆகி பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 29.1 ஓவர்களில் 63 ரன்னாக இருந்தது.

இதனை அடுத்து ஹேன்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ்சுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடினார்கள். ஆட்டத்தை டிராவை நோக்கி நகர்த்தும் முயற்சியில் இருவரும் முனைப்பு காட்டினார்கள். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து இருந்தது. தேனீர் இடைவேளை வரை இருவரும் விக்கெட்டை இழக்காமல் நிலைத்து நின்று தொடர்ந்து விளையாடினார்கள். தேனீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

ஹேன்ட்ஸ்கோம்ப்–ஷான் மார்ஷ் போராட்டம்

தேனீர் இடைவேளைக்கு பிறகும் ஹேன்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ் ஆகியோர் தங்களது நங்கூரம் பாய்த்த ஆட்டத்தை தொடர்ந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஹேன்ட்ஸ்கோம்ப் 126 பந்துகளில் 4 பவுண்டரியுடன் அரை சதத்தை கடந்தார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். அஸ்வின் பந்து வீச்சில் பவுண்டரி விளாசி ஷான் மார்ஷ் அரை சதத்தை (191 பந்துகளில் 7 பவுண்டரியுடன்) எட்டினார். இருவரும் அணியை சரிவில் காக்கும் முயற்சியில் போராடினார்கள். இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணி எடுத்த முயற்சிக்கு நீண்ட நேரத்துக்கு பிறகே பலன் கிடைத்தது.

அணியின் ஸ்கோர் 91.2 ஓவர்களில் 187 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய 5–வது விக்கெட் ஜோடி பிரிந்தது. ஷான் மார்ஷ் (53 ரன், 197 பந்துகளில் 7 பவுண்டரியுடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சை தடுத்து ஆட முயல அது ஷாட் லெக் திசையில் அருகில் நின்ற விஜய்யிடம் கேட்ச் ஆனது. 5–வது விக்கெட்டுக்கு ஹேன்ட்ஸ்கோம்ப்–ஷான் மார்ஷ் இணை 62.1 ஓவர்கள் நிலைத்து நின்று 124 ரன்கள் திரட்டியது. அடுத்து களம் கண்ட மேக்ஸ்வெல் (2 ரன்) அஸ்வின் பந்து வீச்சை அடித்து ஆட முயல அடுத்து பேட் மற்றும் பேடில் பட்டு சில்லி பாயின்ட் திசையில் நின்ற விஜய்யிடம் கேட்ச் ஆனது.

டிராவில் முடிந்தது

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், ஹேன்ட்ஸ்கோம்ப்புடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தி ஆட்டத்தை டிராவில் முடித்தனர். ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 100 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.

ஹேன்ட்ஸ்கோம்ப் 200 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 72 ரன்னும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 16 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின், இஷாந்த் ‌ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் புஜாரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அடுத்த ஆட்டம்

4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இதுவரை இரு அணிகளும் 1–1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. புனேவில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் வருகிற 25–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா 451 ரன்

இந்தியா 603/9 டிக்ளேர்

2–வது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

வார்னர் (பி) ரவீந்திர ஜடேஜா 14

ரென்ஷா எல்.பி.டபிள்யூ. (பி) இஷாந்த் ‌ஷர்மா 15

நாதன் லயன் (பி) ரவீந்திர ஜடேஜா 2

ஸ்டீவன் சுமித் (பி) ரவீந்திர ஜடேஜா 21

ஷான் மார்ஷ் (சி) விஜய் (பி) ரவீந்திர ஜடேஜா 53

ஹேன்ட்ஸ்கோம்ப் (நாட்–அவுட்) 72

மேக்ஸ்வெல் (சி) விஜய் (பி) அஸ்வின் 2

மேத்யூ வேட் (நாட்–அவுட்) 9

எக்ஸ்டிரா 16

மொத்தம் (100 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 204

 

விக்கெட் வீழ்ச்சி:

1–17, 2–23, 3–59, 4–63, 5–187, 6–190.

பந்து வீச்சு விவரம்:

அஸ்வின் 30–10–71–1

ரவீந்திர ஜடேஜா 44–18–54–4

உமேஷ்யாதவ் 15–2–36–0

இஷாந்த் ‌ஷர்மா 11–0–30–1


Next Story