இந்திய கேப்டன் விராட் கோலியை அமெரிக்க அதிபருடன் ஒப்பிட்டு விமர்சனம்


இந்திய கேப்டன் விராட் கோலியை அமெரிக்க அதிபருடன் ஒப்பிட்டு விமர்சனம்
x
தினத்தந்தி 21 March 2017 10:00 PM GMT (Updated: 21 March 2017 8:14 PM GMT)

இந்திய கேப்டன் விராட் கோலியை அமெரிக்க அதிபருடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய ஊடகம் விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் நிறைவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி டெஸ்ட் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே சீண்டலும், உரசலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய ஆடுகளங்களை குறை கூறினர். இதன் பின்னர் 2-வது டெஸ்டின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. மூளை மழுங்கி பெவிலியனில் இருந்த வீரர்களின் உதவியை நாடிவிட்டதாக ஸ்டீவன் சுமித் கூறினார். ஏற்கனவே இவ்வாறு இரண்டு முறை ஆஸ்திரேலியர்கள் டி.ஆர்.எஸ். நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதை பார்த்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி புகார் கூறினார். இந்த பிரச்சினையில் ஐ.சி.சி. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டது.

காயத்தை வைத்து விளையாட்டு

ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்டின் போது, தோள்பட்டை காயத்தை வைத்து ஒரு குடுமிபிடியே நடந்தது. இதில் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய கேப்டன் விராட் கோலி, பவுண்டரி அருகே பாய்ந்து பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதே போன்று பீல்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், தனது தோள்பட்டையை பிடித்து காட்டி கோலியின் காயத்தை பரிகாசம் செய்தார். கோலி இதற்கு பதிலடி கொடுக்க தவறவில்லை.

அடுத்ததாக தோள்பட்டை காயத்துக்கு தனக்கு சிகிச்சை அளித்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்கத்தை ஆஸ்திரேலியர்கள் அவமதித்ததாக பகிரங்க குற்றம் சாட்டினார். ‘4-5 ஆஸ்திரேலிய வீரர்கள் தேவையில்லாமல் பேட்ரிக் பர்கத்தின் (இவர் ஆஸ்திரேலிய நாட்டவர்) பெயரை முணுமுணுத்தனர். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எனக்கு சிகிச்சை அளிப்பது தான் அவரது வேலை. அவரது பெயரை ஆஸ்திரேலிய வீரர்கள் ஏன் பயன்படுத்தினார்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை. இதை நீங்கள் தான் (நிருபர்கள்) அவர்களிடம் கேட்க வேண்டும்’ என்று கோலி தெரிவித்தார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தோ, தாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை என்றார். இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் வார்னர், ‘பேட்ரிக்கை 19 ஆண்டுகளாக நாங்கள் அறிவோம். அவரை ஏன் நாங்கள் மரியாதை குறைவாக பேச வேண்டும்’ என்றார். இப்படி இரு தரப்பும் நீயா-நானா? என்று மல்லுகட்டுவதால் போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறத்தான் செய்கிறது.

அமெரிக்க அதிபருடன் ஒப்பிட்டு...

இந்த நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆதரவாக அந்த நாட்டு ஊடகமும் வரிந்து கட்டியுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலியை, அதிரடியான எதிர் நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளது.

‘உலக விளையாட்டின் டிரம்ப் ஆகிறார் விராட் கோலி’ என்று தலைப்பிட்டு ஆஸ்திரேலியாவின் தி டெய்லி கிராப் பத்திரிகை எழுதியுள்ள கட்டுரையில், ‘டொனால்டு டிரம்ப் போலவே விராட் கோலியும் தனது முகத்தின் மீது வீசப்பட்ட முட்டையை (குற்றச்சாட்டை) மறைக்க ஊடகத்தை குறை கூறுகிறார்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான வீடியோ

விராட் கோலி ஆட்டம் இழந்த போது அதை கொண்டாடுகையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தனது தோள்பட்டையை பிடித்து காட்டி கிண்டல் செய்ததாக வீடியோ பதிவு ஒன்று வெளியானது. ஆனால் அது சுமித்தின் தோள்பட்டையை சக வீரர் பிடிக்கும் காட்சியாகும். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சுமித்திடம் வந்து மன்னிப்பு கோரியது. அதாவது கோலியின் காயத்தை சுமித் கேலி செய்தார் என்ற தகவல் பரவியதற்கு தவறான வீடியோ பதிவே காரணம் என்று அந்த ஒளிபரப்பு நிறுவனம் தெளிவுப்படுத்தியதை ஆஸ்திரேலிய பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

நிலைமை இப்படி இருக்க, விராட் கோலி ஆதாரங்கள் இல்லாமல் எங்கள் அணி வீரர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைக்கிறார் என்று அந்த பத்திரிகை சாடியுள்ளது. 

Next Story