ஐ.சி.சி. பந்து வீச்சாளர் தரவரிசையில் அஸ்வினை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜடேஜா முதலிடத்தில் நீடிப்பு


ஐ.சி.சி. பந்து வீச்சாளர் தரவரிசையில் அஸ்வினை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜடேஜா முதலிடத்தில் நீடிப்பு
x
தினத்தந்தி 21 March 2017 10:30 PM GMT (Updated: 21 March 2017 8:17 PM GMT)

ஐ.சி.சி. பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார்.

துபாய், 

ஐ.சி.சி. பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார். பேட்டிங் வரிசையில் இந்தியாவின் புஜாரா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி. தரவரிசை

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ராஞ்சியில் அரங்கேறிய 3-வது டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. கொழும்பில் நடந்த டெஸ்டில் வங்காளதேச அணி முதல் முறையாக இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது. வெலிங்டனில் நடந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை 3 நாட்களுக்குள் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது.

இந்த மூன்று போட்டிகள் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிக்கிறார். ராஞ்சி டெஸ்டில் 178, 21 ரன்கள் வீதம் எடுத்து 5 புள்ளிகளை கூடுதலாக பெற்ற ஸ்டீவன் சுமித் மொத்தம் 941 புள்ளிகளை எட்டியுள்ளார். இதுவே அவர் அடைந்த உயர்ந்தபட்ச புள்ளி எண்ணிக்கையாகும்.

ஒட்டுமொத்த ஐ.சி.சி. வரலாற்றில் அதிக புள்ளிகள் குவித்த சாதனையாளர்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (961 புள்ளி), இங்கிலாந்தின் லென் ஹட்டன் (945 புள்ளி), ஜாக் ஹோப்ஸ் (942 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (942 புள்ளி) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ள இங்கிலாந்தின் பீட்டர் மேவை (இவரும் 941 புள்ளி) ஸ்டீவன் சுமித் சமன் செய்துள்ளார். சுமித், இதே போன்று தொடர்ந்து விளையாடினால், தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் வெகுசீக்கிரம் அனைத்து சாதனையையும் உடைத்து விட வாய்ப்புள்ளது.

புஜாரா முன்னேற்றம்

ராஞ்சி டெஸ்டில் 11 மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் நின்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து இரட்டை சதம் (202 ரன்) விளாசிய இந்திய முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா மளமளவென 4 இடங்கள் ஏற்றம் கண்டு, 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரவரிசை இதுவாகும். இரட்டை செஞ்சுரியின் மூலம் 68 புள்ளிகளை சேகரித்த புஜாரா தற்போது மொத்தம் 861 புள்ளிகள் பெற்றிருக்கிறார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஒற்றை இலக்கில் (2, 1) நடையை கட்டிய நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் 3 இடங்கள் சறுக்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்தில் தொடருகிறார். மற்ற இந்திய வீரர்கள் முரளிவிஜய் 31-வது இடத்திலும் (4 இடம் ஏற்றம்), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 51-வது இடத்திலும் (14 இடம் உயர்வு) இருக்கிறார்கள்.

வங்காளதேச வீரர்கள் ஷகிப் அல்-ஹசன் (21-வது இடம்), முஷ்பிகுர் ரஹிம் (28), இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 72 ரன்கள் (நாட்-அவுட்) அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (35) உள்ளிட்டோர் தங்களது வாழ்க்கையில் சிறந்த தரநிலையை எட்டியிருக்கிறார்கள்.

பந்து வீச்சில் ஜடேஜா

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த டெஸ்டுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜாவும், மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் தலா 892 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். ராஞ்சி போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஜடேஜா மேற்கொண்டு 7 புள்ளிகளை பெற்று தனது புள்ளி எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தி தனி வீரராக ‘நம்பர் ஒன்’ அரியணையில் அமர்ந்து விட்டார். அதே சமயம் ராஞ்சி டெஸ்டில் தடுமாறிய அஸ்வின் 64 ஓவர்கள் பந்து வீசியும் வெறும் 2 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் 30 புள்ளிகளை பறிகொடுத்துள்ள அவர் 862 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு பின்தங்கி விட்டார். ஜடேஜா இன்னும் ஒரு புள்ளி எடுத்தால் 900 புள்ளி மைல்கல்லை தொட்ட 2-வது இந்திய பவுலர் என்ற சிறப்பை பெறுவார். இதற்கு முன்பு அஸ்வின் அதிகபட்சமாக 904 புள்ளிகள் வரை எடுத்திருந்தது நினைவிருக்கலாம்.

உமேஷ் யாதவ்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 இடங்கள் உயர்ந்து 26-வது இடத்தையும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 15 இடங்கள் எகிறி 37-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இதுவே சிறந்த நிலையாகும்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் ஒரு இடம் அதிகரித்து முதலிடத்திற்கு (431 புள்ளி) முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சதத்துடன், 6 விக்கெட்டுகளையும் சாய்த்ததன் மூலம் இந்த ஏற்றம் அவருக்கு கிட்டியுள்ளது. இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்திற்கு (408 புள்ளி) சரிந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 387 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

2-வது இடத்துக்கு போட்டா போட்டி

ஏப்ரல் 1-ந்தேதி நிலவரப்படி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பட்டத்துடன் ரூ.6½ கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகை இந்திய அணிக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3¼ கோடியும், 3-வது இடம் வகிக்கும் அணிக்கு ரூ.1 கோடியே 30 லட்சமும் அளிக்கப்படும்.

முதலிடத்தை இந்தியா வசப்படுத்தி விட்ட நிலையில், இப்போது 2-வது இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் தர்மசாலாவில் வருகிற 25-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும்.

தென்ஆப்பிரிக்க அணி 2-வது இடத்தை பெற வேண்டும் என்றால், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா தோற்க வேண்டும். அதே சமயம் தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றியோ அல்லது டிராவோ காண வேண்டும்.

Next Story