தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும்: இந்திய அணியினர் பதற்றத்தில் இருப்பார்கள் மிட்செல் ஜான்சன் சொல்கிறார்


தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும்: இந்திய அணியினர் பதற்றத்தில் இருப்பார்கள் மிட்செல் ஜான்சன் சொல்கிறார்
x
தினத்தந்தி 22 March 2017 11:30 PM GMT (Updated: 22 March 2017 7:19 PM GMT)

தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்பதால் இந்திய அணியினர் நிச்சயம் பதற்றத்தில் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கும் தர்மசாலா மைதானம், அற்புதமான மைதானமாகும். புற்கள் நிறைந்த ஆடுகளமாக அதை ஒரு முறை மட்டும் பார்த்து இருக்கிறேன். அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனேகமாக மிகுந்த நம்பிக்கையுடனும், இந்திய வீரர்கள் கொஞ்சம் பதற்றமுடனும் (புற்கள் இருந்தால் வேகப்பந்து வீச்சு எடுபடும்) இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் இந்திய வீரர்கள் அதீத நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். ஸ்கோர் போர்டு அதைத்தான் காட்டுகிறது.

ராஞ்சியில் நடந்த 3–வது டெஸ்டை டிரா செய்தது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரை மட்டும் நம்பி இருக்கவில்லை. அணியில் உள்ள மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடக்கூடிய திறமை படைத்தவர்கள் என்பதை இந்திய வீரர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

ஆஸ்திரேலியா வெற்றி பெறும்

ராஞ்சி டெஸ்டை டிராவில் முடித்தாலும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்திருப்பார்கள். தோல்வியின் பிடியில் இருந்து மீண்டதால் அது அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். முந்தைய காலங்களில் இது போன்ற நிலைமையில் நிலைகுலைந்து தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். அதனால் தான் அடுத்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கக்கூடும் என்பதால், எங்கள் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரின் இடம் பறிபோகலாம். நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன், ஸ்டீவ் ஓ கீபே இருவரும் ஆர்வமுடன் பந்து வீசி வருகிறார்கள். சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த நிலைமையில் அனுபவம் கவனத்தில் கொள்ளப்படும். அப்படிப்பார்த்தால் நாதன் லயன் அணியில் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். அவர் பந்தை அதிகமாக ‘பவுன்ஸ்’ செய்யக்கூடியவர். பந்தில் சுழற்சியை காட்டுவதிலும் அருமையாக செயல்படுகிறார். இங்கு 3–வது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தேவை என்று ஆஸ்திரேலியா விரும்பினால், அதற்கு பொருத்தமானவராக ஜாக்சன் பேர்டு இருப்பார்.

இவ்வாறு மிட்செல் ஜான்சன் கூறினார்.

‘இந்திய அணி அஞ்சுகிறது’

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அளித்த பேட்டியில், ‘பார்டர்–கவாஸ்கர் கோப்பையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இந்திய வீரர்கள் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்கிறார்கள். எங்களை விட அவர்களே அதிகமாக வார்த்தை மோதலில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

எப்படி கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதை எங்களது வீரர்கள் ராஞ்சி டெஸ்டில் நிரூபித்து காட்டினர். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் போன்ற இளம் வீரர்களின் ஆட்டம் வியப்பூட்டியது. இந்திய அணியை அவர்களது சொந்த இடத்திலேயே (முதலாவது டெஸ்ட்) வீழ்த்தி விட்டதால் அவர்களிடத்தில் பயம் ஏற்பட்டு விட்டது.

கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று கருதுகிறேன். சரியான முறையில் திறமையை வெளிப்படுத்தினால், தொடரை கைப்பற்ற முடியும். சவாலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.’ என்றார்.

ஜூன் மாதம் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக உடல்தகுதியை எட்டி விடுவேன் என்றும் ஸ்டார்க் குறிப்பிட்டார்.

--–

ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு அமிதாப் பச்சன் பதிலடி

--–

இந்திய கேப்டன் விராட் கோலியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய பத்திரிகை தி டெய்லி டெலிகிராப் விமர்சனம் செய்தது. ‘விராட் கோலி, விளையாட்டு உலகின் டிரம்ப் ஆகிறார். டிரம்ப் போன்று, தன் மீதான சர்ச்சைக்குரிய புகார்களை மறைக்க ஊடகங்களை குறை கூறுகிறார், கோலி’ என்று அந்த பத்திரிகை கூறியிருந்தது.

இதற்கு இந்தி பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். ‘ஆஸ்திரேலிய ஊடகம் விராட் கோலியை விளையாட்டின் டொனால்டு டிரம்ப் என்று வர்ணித்துள்ளது. விராட் கோலி ஒரு வெற்றியாளர் மற்றும் அதிபர் என்பதை ஒப்புக்கொண்டதற்காக ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு நன்றி’ என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


Next Story