இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்: விஜய், புஜாரா, ஜடேஜா தரம் உயர்வு ஊதியம் இரண்டு மடங்காக அதிகரிப்பு


இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்: விஜய், புஜாரா, ஜடேஜா தரம் உயர்வு ஊதியம் இரண்டு மடங்காக அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 March 2017 12:15 AM GMT (Updated: 22 March 2017 7:47 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியம், ஏ, பி, சி என்று வீரர்களை தரம் (கிரேடு) பிரித்து ஒப்பந்தம் அடிப்படையில் ஊதியம் வழங்குகிறது.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டிலும் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் கிரேடு மாற்றப்படும்.

இதன்படி இந்த ஆண்டுக்கான (2016–17) வீரர்களின் ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனி, அஸ்வின், ரஹானே ஆகியோர் ஏ கிரேடை தக்க வைத்துக்கொண்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட போதிலும் டோனி ஏ கிரேடில் நீடிப்பது கவனிக்கத்தக்கது. மேலும் 3 பேர் ஏ கிரேடுக்கு வந்துள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் விளாசி அசத்திய புஜாரா, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முரளிவிஜய் ஆகியோர் ‘பி’–ல் இருந்து ஏ கிரேடுக்கு முன்னேறியுள்ளனர். டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக நம்பர் ஒன் அரியணையில் ஏறியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் சி–ல் இருந்து ஏ கிரேடுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

ரூ.2 கோடி ஊதியம்

கடந்த ஆண்டு ஏ கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இனி ஏ கிரேடு வீரர்கள் ரூ.2 கோடியை சம்பளமாக அள்ளுவார்கள்.

பி கிரேடு வீரர்களின் ஊதியம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், முகமது ‌ஷமி, யுவராஜ்சிங், விருத்திமான் சஹா உள்பட 9 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சி கிரேடு வீரர்களின் ஊதியம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் நெஹரா, ஷிகர் தவான், கருண் நாயர் உள்பட 16 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். தவான் முன்பு ‘பி’ பிரிவில் இருந்தார். ரன் குவிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருவதால் அவர் சி கிரேடுக்கு இறக்கப்பட்டுள்ளார்.

ரெய்னா நீக்கம்

32 பேர் கொண்ட இந்த பட்டியலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா இடம் பெறவில்லை. ‘ஒரு நாள் போட்டியில் சிறப்பு வாய்ந்த வீரர்’ என்று வர்ணிக்கப்படும் ரெய்னா அணியில் இடம் பிடிக்கவே போராடுவதால் ஒப்பந்தத்தில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரெய்னா 2014–15–ம் ஆண்டில் ஏ பிரிவில் இருந்தார். கடந்த முறை பி பிரிவில் இருந்தார். தற்போது முழுமையாக ஓரங்கட்டப்பட்டு விட்டார்.

மூத்த வீரர்கள் கவுதம் கம்பீர், ஹர்பஜன்சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. முதல் முறையாக ஒப்பந்தத்திற்குள் வந்துள்ள இளம் புயல் ரிஷாப் பான்ட் ‘சி’ பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

போட்டி கட்டணமும்...

போட்டி கட்டணத்திலும் வீரர்களுக்கு பண மழை கொட்டுகிறது. ஆண்டு ஊதியம் போக போட்டியில் பங்கேற்பதற்கும் வீரர்களுக்கும் தனியாக கட்டணம் வழங்கப்படுவது உண்டு. இதன்படி டெஸ்ட் கட்டணமாக முன்பு ரூ.7½ லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அது ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல் ஒரு நாள் போட்டி கட்டணம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், 20 ஓவர் போட்டி கட்டணம் ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும் உயருகிறது.

இந்திய ஒப்பந்த வீரர்கள் விவரம் வருமாறு:–

ஏ கிரேடு: விராட் கோலி, டோனி, அஸ்வின், ரஹானே, புஜாரா, ரவீந்திர ஜடேஜா, முரளிவிஜய்.

பி கிரேடு: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், விருத்திமான் சஹா, ஜஸ்பிரித் பும்ரா, யுவராஜ்சிங்.

சி கிரேடு: ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, அமித் மிஸ்ரா, மனிஷ் பாண்டே, அக்‌ஷர் பட்டேல், கருண் நாயர், ஹர்திக் பாண்ட்யா, ஆஷிஷ் நெஹரா, கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், பார்த்தீவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், மன்தீப்சிங், தவால் குல்கர்னி, ‌ஷர்துல் தாகுர், ரிஷாப் பான்ட்.

ஊதிய ஒப்பந்தம் முன்தேதியிட்டு, 2016–ம் ஆண்டு அக்டோபர் 1–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


Next Story