ஐ.சி.சி. இடைக்கால சேர்மனாக நீடிக்க ‌ஷசாங் மனோகர் சம்மதம்


ஐ.சி.சி. இடைக்கால சேர்மனாக நீடிக்க ‌ஷசாங் மனோகர் சம்மதம்
x
தினத்தந்தி 24 March 2017 10:30 PM GMT (Updated: 24 March 2017 6:34 PM GMT)

ஐ.சி.சி.யின் இடைக்கால சேர்மனாக நீடிக்க ‌ஷசாங் மனோகர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

துபாய்,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ‌ஷசாங் மனோகர் கடந்த ஆண்டு (2016) மே மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முதலாவது தனிப்பட்ட சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பதவி காலம் மேலும் 16 மாதங்கள் இருந்த நிலையில் ‌ஷசாங் மனோகர் ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து கடந்த 15–ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணத்துக்காக அவர் பதவியில் இருந்து விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆண்டு வருவாயில் அதிக தொகையை பகிர்ந்து அளிக்கும் விதத்தில் கடந்த 2014–ம் ஆண்டில் ஐ.சி.சி. விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனை எல்லாருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் முறையில் திருத்தம் செய்ய கடந்த பிப்ரவரி மாதத்தில் ‌ஷசாங் மனோகர் எடுத்த முதல் கட்ட நடவடிக்கைக்கு கொள்கை ரீதியாக நல்ல ஆதரவு கிடைத்தது. இருப்பினும் இந்த வி‌ஷயத்தில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. வருமான பகிர்வு விதிமுறையில் திருத்தம் கொண்டு வர ஐ.சி.சி. உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆனால் இந்த விதிமுறை திருத்தத்தை தடுக்கும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியதால் ‌ஷசாங் மனோகர் பதவியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

முடிவு ஒத்திவைப்பு

இதற்கிடையில் ஐ.சி.சி. செயற்குழு சார்பில் ‌ஷசாங் மனோகர் தனது ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஐ.சி.சி. யின் நிர்வாக மற்றும் நிதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஐ.சி.சி. செயற்குழுவின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ‌ஷசாங் மனோகர் தனது ராஜினாமா முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்து இருப்பதுடன், விதிமுறை திருத்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை பதவியில் நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து ‌ஷசாங் மனோகர் கூறுகையில், ‘ஐ.சி.சி. இயக்குனர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளையும், என் மீது அவர்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன். நிர்வாக சீர்திருத்த தீர்மானத்தில் முடிவு காணும் வரை சேர்மன் பதவியில் நீடிக்க விரும்புகிறேன். ஆனால் தனிப்பட்ட காரணத்துக்கான சேர்மன் பதவியில் இருந்து விலகும் எனது முடிவில் மாற்றம் எதுவும் இல்லை’ என்றார்.


Next Story