100 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே களம் இறங்குவேன் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி


100 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே களம் இறங்குவேன் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி
x
தினத்தந்தி 24 March 2017 11:30 PM GMT (Updated: 24 March 2017 6:40 PM GMT)

உடல்தகுதி சோதனையில் முழுமையாக தேறினால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் களம் இறங்குவேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

தர்மசாலா,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்டின் முதல் நாளில், பவுண்டரிக்கு ஓடிய பந்தை ‘டைவ்’ அடித்து தடுக்க முயன்ற இந்திய கேப்டன் விராட் கோலி வலது தோள்பட்டையில் காயமடைந்தார். இதனால் ஒரு நாள் முழுவதும் அவர் பீல்டிங் செய்யவில்லை. சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட்டிங் செய்தார். ஆனாலும் ஜொலிக்கவில்லை. முந்தைய 4 தொடர்களில் தொடர்ந்து இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்த விராட் கோலி இந்த தொடரில் முதல் 3 டெஸ்டில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நிலையில் காயம் முழுமையாக குணமடையாததால் இன்று தொடங்கும் முக்கியத்துவம் வாய்ந்த கடைசி டெஸ்டில் விராட் கோலி ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. நேற்று 20 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:–

எந்த ஒரு வீரரும் முழு உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் களம் காண முடியாது என்பது இந்திய அணியில் எழுதப்படாத விதியாகும். இதில் யாருக்கும் விதி விலக்கு அளிக்க முடியாது. விதிமுறை எல்லோருக்கும் ஒன்று தான். எனவே 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே கடைசி டெஸ்டில் விளையாடுவேன். இன்னொரு பரிசோதனைக்கு பிறகு என்னுடைய நிலைப்பாடு தெரிய வரும். நான் விளையாடுவது குறித்து நாளை (இன்று) காலைக்குள் முடிவு எடுக்கப்படும்.

கருத்தில் மாற்றமில்லை

தற்போது நான் இயல்பான நிலையில் இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்கும் போது எப்படி ஆடுகிறோம் என்பதில் இருந்து என்னால் வித்தியாசத்தை உணர முடிகிறது. முடிந்த வரை முழு உடல்தகுதியை எட்ட முயற்சிக்கிறேன். ஒரு வேளை நான் விளையாட முடியாமல் போனால் எனக்கு பதிலாக இன்னொரு வீரர் அணியை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை பெறுவார். நான் ஆடினாலும் ஆடாவிட்டாலும் அது மற்ற 10 வீரர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் அவர்களுக்கும் சிறப்பாக ஆட வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

டி.ஆர்.எஸ். விதிமுறையை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தவறாக பயன்படுத்தியது தொடர்பாக நான் சொன்ன கருத்துகளும், இந்திய பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்கட்டை ஆஸ்திரேலிய வீரர்கள் அவமதித்தனர் என்று நான் கூறிய குற்றச்சாட்டுகளும் சரியானவை தான். சரியான வி‌ஷயங்களில் இருந்து நான் பின்வாங்குவதில்லை. அது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் ஒரு வி‌ஷயம். தனிப்பட்ட ஒருவரால் (தன்னை குறிப்பிட்டு) நிறைய பேர் (ஆஸ்திரேலிய ஊடகம் உள்பட) பாதிக்கப்பட்டு இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

ஸ்டீவன் சுமித் பேட்டி

கடைசி டெஸ்டில் விராட் கோலி ஆட முடியாமல் போனால் அது எந்த அளவுக்கு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் கேட்ட போது, ‘நான் அப்படி நினைக்கவில்லை. அனேகமாக அவருக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார். ராஞ்சி டெஸ்டில் காயத்தால் விராட் கோலி வெளியில் இருந்த போது, கேப்டன் பணியை ரஹானே மிகச்சிறப்பாக செய்தார். அவரால் இந்த பணியை நன்றாக செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். விராட் கோலியை போல் அல்லாமல் களத்தில் பொறுமையை கடைபிடிக்கக்கூடியவர், ரஹானே. எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார். ஆட்டத்தின் போக்கை நன்கு புரிந்து கொள்வார். எனவே கோலி ஆட முடியாமல் போனாலும், இந்திய அணி வலுவாகத் தான் இருக்கும்.

இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் ஆக்ரோ‌ஷமான ஆட்டக்காரர். எங்களுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் பந்திலேயே அவர் சிக்சர் அடித்ததாக நினைக்கிறேன். அவரை பார்க்கும் போது, எதிர்காலத்தில் சிறந்த வீரராக உருவெடுப்பார் போல் தோன்றுகிறது’ என்றார்.


Next Story