அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய ‘சைனாமேன்’ பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்


அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய ‘சைனாமேன்’ பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்
x
தினத்தந்தி 25 March 2017 11:30 PM GMT (Updated: 25 March 2017 7:19 PM GMT)

தர்மசாலாவில் நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அறிமுகம் ஆனார்.

 4 முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை மிரள வைத்த 22 வயதான குல்தீப் யாதவ் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உண்டு.

குல்தீப் யாதவ் ‘சைனாமேன் பவுலர்’ என்று அழைக்கப்படுகிறார். அது என்ன ‘சைனாமேன்’ என்கிறீர்களா? அதற்கு ஒரு கதை இருக்கிறது.

1933–ம் ஆண்டு இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையே டெஸ்ட் போட்டி ஓல்ட்டிராப்போர்டில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அங்கம் வகித்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எலிஸ் அகாங் சீனாவை பூர்விகமாக கொண்டவர். அவரது வித்தியாசமான ஒரு பந்து வீச்சில் அதாவது ஆப்–சைடில் ‘பிட்ச்’சாகி வந்த பந்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் வால்டர் ராபின்ஸ், ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ராபின்ஸ் அவரை பார்த்து ‘பிளடி சைனாமேன்’ என்று திட்டி தீர்த்தார். அன்றிலிருந்து இந்த பந்து வீச்சு முறை கிரிக்கெட் வட்டாரத்தில் ‘சைனாமேன்’ பந்து வீச்சு என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் லெக்–ஸ்பின் வீசுவார்கள். அதாவது அவர்கள் வீசும் பந்து பேட்ஸ்மேனுக்கு லெக்சைடில் ‘பிட்ச்’ ஆகி ஆப்–சைடுக்கு செல்லும். இதில் இருந்து மாறுபட்டு ஆப்–சைடில் ‘பிட்ச்’ செய்து லெக் சைடுக்கு திரும்பும் வகையில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை வீசினால் அதுவே ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சு கலையாகும். இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களால் மட்டுமே இந்த வகையில் பவுலிங் செய்ய முடியும்.

இந்த முறையில் பந்து வீசுவது எளிதான அல்ல. பந்தை பிடிக்கும் விதமே கடினமாக இருக்கும். சுழற்சிக்கு விரலை காட்டிலும் கையின் மணிக்கட்டை தான் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

சர்வதேச அரங்கில் ஒரு சில ‘சைனாமேன்’ பந்து வீச்சாளர்களே உருவெடுத்து இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக், சைமன் கேடிச் மற்றும் இலங்கையின் லக்‌ஷன் சன்டகன் உள்ளிட்டோர் இந்த வகை பந்து வீச்சாளர்கள் தான்.

சர்வதேச அரங்கில் கால் பதித்த முதல் இந்திய ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் என்ற அரிய பெருமையை பெற்றுள்ள குல்தீப் யாதவுக்கு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘குல்தீப் யாதவின் பந்து வீச்சு தன்மையும், அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள விதமும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. இதே போல் தொடர்ந்து சிறப்பாக பந்து வீச வேண்டும். இது நீ ஜொலிக்கும் டெஸ்டாக இருக்க வேண்டும்’’ என்று தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் உணர்ச்சி வசப்பட்ட குல்தீப் யாதவ், ‘இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றத்தில் இருந்தேன். போக போக இயல்பு நிலைக்கு திரும்பினேன். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே தான் எனது முன்மாதிரி. சிறு வயது மேலே அவரைத்தான் பின்பற்றி வருகிறேன். அவரது பவுலிங் வீடியோ காட்சியை மட்டுமே பார்ப்பேன். ஒரு முறை அவரை சந்தித்து பேசிய போது என்னால் நம்பவே முடியவில்லை. அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த டெஸ்டில் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய அந்த பந்து வீச்சு ‘சைனாமேன்’ வகையில் இருந்து மாறுபட்டது. அந்த வகை பந்து வீச்சை ஷேன் வார்னேவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். அவரிடம் கற்றுக்கொண்ட வித்தையை வைத்து அவரது நாட்டவரையே சாய்த்தது இனிமையான உணர்வை தருகிறது’ என்றார்.


Next Story