நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 314 ரன்னில் ஆல்-அவுட்


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 314 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 26 March 2017 9:00 PM GMT (Updated: 26 March 2017 8:23 PM GMT)

தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது.

ஹாமில்டன், 

தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. மழை பாதிப்புக்கு மத்தியில் முதல் நாளில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 89.2 ஓவர்களில் 314 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இரண்டு முறை மழையால் ஆட்டம் தடைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விரல் காயத்தையும் பொருட்படுத்தாமல் களம் புகுந்த விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 90 ரன்களும் (118 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 53 ரன்களும் சேர்த்தனர். டி காக் ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் திரட்டுவது இது 12-வது நிகழ்வாகும். அவர் 50 ரன்களுக்கு மேல் அடித்த டெஸ்ட் அனைத்திலும் தென்ஆப்பிரிக்க அணிக்கே வெற்றி கிடைத்திருக்கிறது. அவரது அந்த அதிர்ஷ்டம் இங்கும் தொடருமா? என்பதை பார்ப்போம்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 42 ரன்னுடனும், ஜீத் ராவல் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 

Next Story