புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கியது ஏன்? உரிமையாளர் விளக்கம்


புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கியது ஏன்? உரிமையாளர் விளக்கம்
x
தினத்தந்தி 3 April 2017 9:20 AM GMT (Updated: 3 April 2017 9:20 AM GMT)

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கியது ஏன்? என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் விளக்கம் அளித்து உள்ளார்.


ஐபிஎல் 10 வது சீசன் ஆரம்பமாகவுள்ளது. இதில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் டோனி நீக்கபட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது புனே நிர்வாகம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமைதாங்கி எட்டு சீசனில் தொடர்ந்து பிளேஆப்க்கு வழிநடத்தியவர் தோனி. அவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது. டோனி தலைமையில் தான் இந்திய அணி இரண்டு முறை உலக கோப்பைகளை ஜெயித்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு  சிறப்புமிக்க தோனியை எந்த அடிப்படையில் கேப்டன் பதவியில் இருந்து புனே நிர்வாகம் நீக்கியுள்ளது என தொடந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தான் அணியின் எதிர்காலம் கருதி இம்முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் புனே அணியின் உரிமையாளர்.

புனே அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயன்கா.டோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் அணியில் முக்கிய பங்கு வகிப்பார் டோனி என கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

"ஐபிஎல் ஆரம்பிக்க இருக்கிறது. எங்களது முதல் ஆட்டம் 6ம் தேதி தொடங்குகிறது. டோனி திங்கள் கிழமை அணியில் இணைவார். இந்த முறை தொடரில் சிறப்பான ஆட்டத்தை அணி வெளிப்படுத்தும். தோனியும், ஸ்மித்தும் அணித்தேர்வில் இருந்தே டச்சில் இருந்துகொண்டே தான் இருக்கின்றனர். அவர்களுக்குள் நல்ல நட்புமுறை உள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஸ்மித்தை கேப்டனாக நியமித்த காரணம் கேட்டபோது அவர்  "இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு பலபேருடன் பலமுறை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது டோனியிடம் கேட்டு எடுக்கப்பட்ட முடிவு தான். டோனி மிகவும் கூர்மையான அறிவை உடையவர். அவர் மீது ஒரு வீரராக, கேப்டனாக,மனிதராக எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். யார் என்ன வேண்டுமென்றாலும் கூறலாம், இது அணியின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுதான்.  மேலும் போனமுறையே நியுமரலாஜிபடி ஆர்.எஸ்.பி.ஜியில் இருக்கும் 'எஸ்'ஸை நீக்கச் சொன்னார்கள். ஆனால் நாங்கள் காதுகொடுக்கவில்லை. ஆனால் போன வருடம் அணி விளையாடியதை பார்த்தால் நியுமரலாஜியை முயற்சி செய்வதில் தவறில்லை என்று தோன்றியது" என்று கூறினார்.

Next Story