தந்தை இறந்த சோகத்தை மறைத்து களத்தில் ரசிகர்களை குஷிப்படுத்திய ரிஷாப் பான்ட்


தந்தை இறந்த சோகத்தை மறைத்து களத்தில் ரசிகர்களை குஷிப்படுத்திய ரிஷாப் பான்ட்
x
தினத்தந்தி 9 April 2017 9:00 PM GMT (Updated: 9 April 2017 8:43 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வென்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வென்றது. இதில் கேதர் ஜாதவின் அரைசதத்தின் (5 பவுண்டரி, 5 சிக்சருடன் 69 ரன்) உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்களே எடுக்க முடிந்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (57 ரன், 36 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை போராடியும் பலன் இல்லை. ஒட்டுமொத்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியின் 76-வது தோல்வி இதுவாகும். ஐ.பி.எல்.-ல் அதிக தோல்விகளை தழுவிய அணி டெல்லி தான். அந்த அணியின் கேப்டன் ஜாகீர்கான் கூறுகையில், ‘10 ஆட்டங்களில் 8-ல் இத்தகைய இலக்கை நாங்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாததே தோல்விக்கு காரணம்’ என்றார்.

19 வயதான டெல்லி வீரர் ரிஷாப் பான்டின் தந்தை ராஜேந்திர பான்ட் (வயது 53) கடந்த புதன்கிழமை இரவு மரணம் அடைந்தார். இதையடுத்து ஹரித்வார் சென்ற ரிஷாப் பான்ட், தந்தைக்கு இறுதிசடங்குகளை செய்து விட்டு, வெள்ளிக்கிழமை இரவு அணியுடன் இணைந்தார். மறுநாளே (அதாவது நேற்று முன்தினம்) டெல்லியின் முதல் ஆட்டம் என்பதால் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவரோ மனதை தேற்றிக்கொண்டு களம் இறங்கியதுடன் அதிரடியாக அரைசதமும் விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தினார். டெல்லி அணி தோற்றாலும், சோகத்தை மறைத்து களத்தில் அவர் செயல்பட்ட விதத்தை சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், யுவராஜ்சிங் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் பட்டி அப்டன் கூறுகையில், ‘அடுத்த சில நாட்கள் மட்டுமல்ல, ஐ.பி.எல். போட்டி முழுவதும் ஒட்டுமொத்த அணியும் ரிஷாப் பான்ட்டை அரவணைத்து அவருக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருப்போம்’ என்றார். சக வீரர் கிறிஸ் மோரிஸ் (தென்ஆப்பிரிக்க நாட்டவர்) கூறும் போது, ‘எனது தந்தை இறந்திருந்தால் இந்த நேரம் முதல் விமானத்தை பிடித்து தாயகம் திரும்பியிருப்பேன் என்று சக வீரர்களிடம் கூறினேன். எனக்காக எனது தந்தை எவ்வளவோ செய்திருக்கிறார். தந்தை மறைந்த ஓரிரு நாளில் ரிஷாப் பான்ட் விளையாடி இருக்கிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலையில் நான் விளையாடுவதையே எனது தந்தை விரும்பியிருப்பார்’ என்று பதில் அளித்தார். இது அவரது மனஉறுதியை காட்டுகிறது. வருங்காலத்தில் இந்திய அணியில் மிகப்பெரிய வீரராக ரிஷாப் பான்ட் உருவெடுக்க போகிறார்’ என்றார். 

Next Story