ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணி 160 ரன்கள் சேர்ப்பு


ஐ.பி.எல். கிரிக்கெட்:  புனே அணி 160 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 24 April 2017 9:15 PM GMT (Updated: 24 April 2017 8:03 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

மும்பை,

8 அணிகள் இடையிலான 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த 28–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்–புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. மும்பை அணியில் காயம் காரணமாக குணால் பாண்ட்யா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக கரண்‌ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார். புனே அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

ரஹானே 38 ரன்

‘டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ராகுல் திரிபாதி ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஜான்சன் வீசினார். முதல் ஓவரில் கடைசி பந்தை ரஹானே சிக்சருக்கு தூக்கினார். திரிபாதியும் அடித்து ஆடினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்) இருவரும் இணைந்து 48 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கண்டனர்.

அணியின் ஸ்கோர் 76 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஆட்டக்காரர் ரஹானே (38 ரன்கள், 32 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கரண்‌ஷர்மா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். திரிபாதி (45 ரன்கள், 31 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) விக்கெட்டையும் கரண்‌ஷர்மா சாய்த்தார்.

புனே அணி 160 ரன்கள்

அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித் (17 ரன், 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் போல்டு ஆனார். 20 ஓவர் போட்டியில் ஹர்பஜன்சிங் வீழ்த்திய 200–வது விக்கெட் இதுவாகும். அதன் பிறகு புனே அணியின் ரன்விகித வேகம் மந்தமானது. பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னிலும் (12 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), டோனி 7 ரன்னிலும் (11 பந்துகளில்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதிரடி காட்டிய மனோஜ் திவாரி 22 ரன்னில் (13 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. டேனியல் கிறிஸ்டியன் 8 ரன்னுடனும் (7 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்), வாஷிங்டன் சுந்தர் 2 ரன்னுடனும் (2 பந்துகளில்) களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் கரண்‌ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டும், ஜான்சன், மெக்லெனஹான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஸ்கோர்போர்டு புனே சூப்பர் ஜெயன்ட்

ரஹானே (சி) அண்ட் (பி) கரண்‌ஷர்மா 38

ராகுல் திரிபாதி (சி) பொல்லார்ட் (பி) கரண்‌ஷர்மா 45

ஸ்டீவன் சுமித் (பி) ஹர்பஜன்சிங் 17

டோனி (பி) ஜஸ்பிரித் பும்ரா 7

பென் ஸ்டோக்ஸ் (பி) ஜான்சன் 17

மனோஜ் திவாரி (பி) ஜஸ்பிரித் பும்ரா 22

டேனியல் கிறிஸ்டியன் (நாட்–அவுட்) 8

வாஷிங்டன் சுந்தர் (நாட்–அவுட்) 2

எக்ஸ்டிரா 4

மொத்தம் (20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 160

விக்கெட் வீழ்ச்சி:

1–76, 2–93, 3–104, 4–126, 5–138, 6–158.

பந்து வீச்சு விவரம்:

ஜான்சன் 4–0–34–1

மெக்லெனஹான் 4–0–36–0

கரண்‌ஷர்மா 4–0–39–2

ஜஸ்பிரித் பும்ரா 4–0–29–2

ஹர்பஜன்சிங் 4–0–20–1


Next Story