இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்புக்கு ஆதரவு இல்லை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வருவாய் பகிர்வு, நிர்வாக முறையில் மாற்றம்


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்புக்கு ஆதரவு இல்லை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வருவாய் பகிர்வு, நிர்வாக முறையில் மாற்றம்
x
தினத்தந்தி 26 April 2017 8:37 PM GMT (Updated: 26 April 2017 8:36 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் பகிர்வு மற்றும் நிர்வாக நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானத்துக்கு எல்லா நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் பகிர்வு மற்றும் நிர்வாக நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானத்துக்கு எல்லா நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்திய வாரியத்துக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்படும்.

ஐ.சி.சி. விதிமுறை திருத்தம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) வருவாயில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு மற்ற உறுப்பினர் நாடுகளின் வாரியத்தை விட அதிக பங்கு அளிக்கும் வகையில் ஐ.சி.சி. விதிமுறையில் கடந்த 2014–ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அத்துடன் ஐ.சி.சி. நிர்வாக நடைமுறையிலும் இந்த 3 நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்த திருத்தத்தில் வகை செய்யப்பட்டது. 3 நாடுகளுக்கு நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவமும், வருவாயில் அதிக தொகையும் வழங்கும் வகையில் செய்யப்பட்ட இந்த திருத்தத்தை மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொள்கை ரீதியாக முடிவு செய்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமரசப்படுத்த கூடுதலாக ரூ.650 கோடி தரப்படும் என்று ஐ.சி.சி. தலைவர் ‌ஷசாங் மனோகர் உத்தரவாதம் அளித்தார். ஆனால் அந்த யோசனையை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இதில் ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வு மற்றும் நிர்வாக நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானம் எடுத்து கொள்ளப்பட்டது. நிர்வாக சீர்திருத்தத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது. மற்ற 9 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் வருவாய் பகிர்வு தீர்மானத்துக்கும் இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற 8 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஐ.சி.சி.யின் விதிமுறை திருத்தம் திட்டமிட்டபடி நிறைவேறி இருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறை மாற்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெருத்த பின்னடைவாக கருத்தப்படுகிறது. இந்த பிரச்சினை காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை காலக்கெடுவுக்குள் அறிவிக்காமல் இழுத்தடித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையில் நடைமுறை பிரச்சினை காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாக ஐ.சி.சி.க்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.


Next Story