ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 26 April 2017 9:30 PM GMT (Updated: 26 April 2017 9:05 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புனே,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

30-வது லீக் ஆட்டம்

8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் புனேயில் நேற்று இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணியில் நாதன் கவுல்டர் நிலே, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பதிலாக டேரன் பிராவோ, பியுஷ் சாவ்லா ஆகியோர் இடம் பிடித்தனர். புனே அணியில் பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு பாப் டுபிளிஸ்சிஸ் சேர்க்கப்பட்டார்.

நல்ல தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ராகுல் திரிபாதி ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். திரிபாதி, சுனில் நரின் வீசிய ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) இருவரும் இணைந்து 57 ரன்கள் திரட்டி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள்.

அணியின் ஸ்கோர் 65 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரஹானே (46 ரன்கள், 41 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) சுனில் நரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட கேப்டன் ஸ்டீவன் சுமித் அடித்து ஆடினார். 12.1 ஓவர்களில் புனே அணி 100 ரன்னை எட்டியது. அதிரடி காட்டிய திரிபாதி 23 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

புனே 182 ரன்கள் குவிப்பு

அடுத்து களம் கண்ட டோனி (23 ரன், 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்), மனோஜ் திவாரி (1 ரன்) ஆகியோர் குல்தீப் யாதவ் வீசிய ஒரு ஓவரில் (18-வது ஓவர்) அடுத்தடுத்து விக்கெட் கீப்பர் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய டேனியல் கிறிஸ்டியன், ஸ்டீவன் சுமித்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிரடி காட்டினார். கடைசி பந்தில் டேனியல் கிறிஸ்டியன் (16 ரன்கள், 6 பந்துகளில் 2 சிக்சருடன்) அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித் 37 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், சுனில் நரின், பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

கொல்கத்தா அபார வெற்றி

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுனில் நரின் 16 ரன்னில் (11 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ரன் அவுட் ஆனார். ராபின் உத்தப்பா 87 ரன்னும் (47 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சருடன்), கேப்டன் கம்பீர் 62 ரன்னும் (46 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் அணியை வெற்றியை நோக்கி வேகமாக பயணிக்க வைத்தனர். டேரன் பிராவோ 6 ரன்னுடனும், மனிஷ் பாண்டே ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். புனே அணி தரப்பில் உனட்கட், டேனியல் கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். கொல்கத்தா அணி வீரர் ராபின் உத்தப்பா ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது வெற்றியை ருசித்த கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 

Next Story