வருவாய் பகிர்வு முறையை ஐ.சி.சி. மாற்றம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,775 கோடி இழப்பு


வருவாய் பகிர்வு முறையை ஐ.சி.சி. மாற்றம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,775 கோடி இழப்பு
x
தினத்தந்தி 27 April 2017 9:27 PM GMT (Updated: 27 April 2017 9:26 PM GMT)

வருவாய் பகிர்வு முறையை ஐ.சி.சி. மாற்றம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வருவாய் பகிர்வு முறையை ஐ.சி.சி. மாற்றம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி. விதிமுறை

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக வருவாய் பகிர்ந்து அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) விதிமுறையில் 2014–ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.

கிரிக்கெட்டின் தலைமை அமைப்பான ஐ.சி.சி.–க்கு கிடைக்கும் மொத்த வருவாயில் இந்த மூன்று கிரிக்கெட் வாரியங்களின் பங்களிப்பே கணிசமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா தான் கிரிக்கெட் வர்த்தகத்தின் சாம்ராஜ்ஜியமாக விளங்குகிறது. இதை கருத்தில் கொண்டே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த திருத்தத்திற்கு மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த மூன்று நாடுகளுக்கும் வருவாயில் அதிக தொகை வழங்கும் திட்டத்தை மாற்ற ஐ.சி.சி. முடிவு செய்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் துபாயில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஓட்டெடுப்பில் இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே ஆதரவு தெரிவித்தது.

இழப்பு எவ்வளவு?

மீண்டும் பழைய வருவாய் பகிர்வு முறை கொண்டு வரப்பட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி. சேர்மன் ‌ஷசாங் மனோகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘8 ஆண்டுகளுக்கு (அதாவது 2015 முதல் 2023–ம் ஆண்டு வரை) ஐ.சி.சி.க்கு கிடைக்கும் மொத்த வருவாயில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.1,880 கோடியை நிதியாக பெறும். இந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரூ.918 கோடியும், ஜிம்பாப்வே ரூ.602 கோடியும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தலா ரூ.847 கோடியும், எஞ்சிய உறுப்பு நாடுகள் அனைத்தும் சேர்ந்து ரூ.1,795 கோடியும் பெறும். வருவாய் பகிர்வு மற்றும் நிர்வாக அமைப்பில் செய்துள்ள மாற்றத்தின் மூலம் எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டு மேலும் முன்னேற்ற பாதையில் செல்ல ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கி இருப்பதாக நம்புகிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய விதிமுறையின்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) ரூ.3,655 கோடி கிடைக்க வேண்டும். மாற்றத்தின் மூலம் ஏறக்குறைய ரூ.1,775 கோடி பி.சி.சி.ஐ.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் இங்கிலாந்துக்கு ரூ.256 கோடி குறைகிறது. மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு முன்பை விட அதிக தொகை கிடைக்கும்.

ஐ.சி.சி. கூட்டத்தில் பி.சி.சி.ஐ. தரப்பில் ரூ.2,886 கோடி வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஐ.சி.சி. ரூ.1,880 கோடியுடன் மேற்கொண்டு ரூ.650 கோடியை மட்டும் கூடுதலாக வழங்க முன்வந்தது. இந்த சலுகையை ஏற்க பி.சி.சி.ஐ மறுத்து விட்டது. இருப்பினும் பி.சி.சி.ஐ கூடுதல் தொகையை பெற விரும்பினால், அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் அதற்கு ஏற்றபடி திருத்தம் செய்ய ஐ.சி.சி. தயாராக உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா சந்தேகம்

இந்த பிரச்சினை எதிரொலியாக ஜூன் மாதம் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. இந்த போட்டிக்கு மற்ற நாடுகள் தங்களது அணி வீரர்களை அறிவித்து விட்ட நிலையில், இந்தியா மட்டும் இன்னும் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, அதில் வருவாய் பகிர்வு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகும் முடிவை இந்தியா எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Next Story