குஜராத்திடமும் சுருண்டது: பெங்களூரு அணி 6-வது தோல்வி


குஜராத்திடமும் சுருண்டது: பெங்களூரு அணி 6-வது தோல்வி
x
தினத்தந்தி 27 April 2017 9:45 PM GMT (Updated: 27 April 2017 9:32 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்திலும் மண்ணை கவ்வியது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்திலும் மண்ணை கவ்வியது.

கெய்ல்-கோலி ஏமாற்றம்


10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் ரெய்னா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு 4-வது ஓவரில் இருந்து பேரிடி விழுந்தது. கேப்டன் விராட் கோலி 10 ரன்னில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் (8 ரன்), டிராவிஸ் ஹெட் (0) இருவரையும் ஒரே ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை காலி செய்தார்.

உள்ளூர் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த கேதர் ஜாதவ், பாசில் தம்பியின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். ஆனால் அவரது பேட்டிங்குக்கும் ஆயுசு குறைவு தான். 31 ரன்களில் (18 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக டிவில்லியர்ஸ் (5 ரன்) ரன்-அவுட் ஆக பெங்களூரு அணி முழுமையாக தடம் புரண்டது.

பெங்களூரு 134 ரன்


நெருக்கடிக்கு மத்தியில் பவான் நெகி (32 ரன், 19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடியதால் அந்த அணி 100 ரன்களை கடந்தது.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 134 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குஜராத் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 ஓவர்களில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் 135 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (16 ரன்), பிரன்டன் மெக்கல்லம் (3 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் ஆரோன் பிஞ்சும், கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் அணியை தூக்கி நிறுத்தினர். பிஞ்ச் 72 ரன்கள் (34 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து வெற்றியை எளிதாக்கினார்.

குஜராத் வெற்றி

குஜராத் அணி 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா (34 ரன்), ரவீந்திர ஜடேஜா (2 ரன்) களத்தில் இருந்தனர். 8-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

அதே சமயம் 9-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இதன் மூலம் பெங்களூரு அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு வெகுவாக மங்கியுள்ளது.

Next Story