5-வது மினி உலக கோப்பை (2006) இடம்: இந்தியா, பங்கேற்ற அணிகள்-10, சாம்பியன்- ஆஸ்திரேலியா


5-வது மினி உலக கோப்பை (2006) இடம்: இந்தியா, பங்கேற்ற அணிகள்-10, சாம்பியன்- ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 27 May 2017 8:39 PM GMT (Updated: 27 May 2017 8:39 PM GMT)

இந்தியாவில், மினி உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா அரங்கேறியது இதுவே முதல் முறையாகும்.

ந்தியாவில், மினி உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா அரங்கேறியது இதுவே முதல் முறையாகும். முதலில் இந்தியாவில் இந்த போட்டி நடப்பதில் சந்தேகம் நிலவியது. போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்க இந்திய அரசு ஒப்புக்கொண்ட பிறகே அந்த சிக்கல் தீர்ந்தது.

பங்கேற்ற 10 அணிகளில் தரவரிசை அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

எஞ்சிய 4 அணிகளான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்காளதேசம் தகுதி சுற்றில் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதிக்கொண்டன. இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை (3 ஆட்டத்திலும் வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (2 வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் பிரதான சுற்றை எட்டின. மற்ற இரு அணிகளும் நடையை கட்டின.

பிரதான சுற்றில் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகித்த இந்தியா முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்தித்தது. இதில் இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து 37 ஓவர்களில் 125 ரன்னில் சுருண்டது. முனாப் பட்டேல், ரமேஷ் பவார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த இலக்கை ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 29.3 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து வெஸ்ட் இண்டீசுடன் மோதிய இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட, வெஸ்ட் இண்டீஸ் அணி சந்தர்பால் (51 ரன்), சர்வான் (53 ரன்) ஆகியோரின் அரைசதங்களால் 2 பந்து மீதம் இருக்கையில் வெற்றிக்கனியை பறித்தது.

பின்னர் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை மொகாலியில் எதிர்கொண்டது. முதலில் பேட்டை பிடித்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷேவாக் 65 ரன்களும், டிராவிட் 52 ரன்களும் எடுத்தனர். இந்த இலக்கை ஆஸ்திரேலியா 45.4 ஓவர்களில் அடைந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. ஷேன் வாட்சன் (50 ரன்), கேப்டன் ரிக்கிபாண்டிங் (58 ரன்), டேமியன் மார்ட்டின் (73 ரன்) அரைசதம் அடித்தனர். மினி உலக கோப்பையில் இந்தியாவை ஆஸ்திரேலிய அணி சாய்த்தது இதுவே முதல் முறையாகும். தோல்வியின் மூலம் இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசும், ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்தும் அரைஇறுதிக்கு முன்னேறின.

அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்டீபன் பிளமிங் தலைமையிலான நியூசிலாந்தையும், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கிரேமி சுமித் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன.

முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலிய அணி, மகுடத்திற்கான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் மோதியது. இந்த ஆட்டம் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது. ஒரு தரப்பாக அமைந்து விட்ட இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 30.4 ஓவர்களில் 138 ரன்களில் அடங்கியது. 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அதன் பிறகு விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்து விட்டது. கேப்டன் பிரையன் லாரா (2 ரன்) உள்பட 7 வீரர்கள் ஒற்றை இலக்கில் வீழ்ந்தனர்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி ஆடிய போது மழை குறுக்கிட்டது. இதனால் 35 ஓவர்களில் 116 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 28.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் லீக்கில் வெஸ்ட் இண்டீசிடம் 10 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.

பரிசளிப்பு விழாவில் ஆஸ்திரேலிய வீரர்கள் நடந்த கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பரிசுக்கோப்பையை அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் வழங்கினார். வெற்றி மிதப்பில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், சீக்கிரம் பரிசு மேடையை விட்டு நகரும்படி சரத்பவாரை கூற, உடனே சக வீரர் டேமியன் மார்ட்டின் அவரை லேசாக தள்ளி விட்டார். ஆஸ்திரேலிய வீரர்கள், சரத்பவரை அவமரியாதை செய்து விட்டதாக பெரும் சலசலப்பு கிளம்பியது. பிறகு நடந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

தகுதி சுற்று உள்பட மொத்தம் 8 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 474 ரன்கள் குவித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு சாம்பியன்ஸ் கோப்பையில் அதிக ரன்கள் திரட்டிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் முதலிடத்தை (7 ஆட்டத்தில் 13 விக்கெட்) பிடித்தார். இதில் லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனை படைத்ததும் அடங்கும்.

இந்த மினி உலக கோப்பையை பொறுத்தவரை கணிக்க முடியாத அளவுக்கு ஆட்டத்தின் போக்கு அமைந்தன. இது இந்திய ஆடுகளங்களா என்று சொல்லும் அளவுக்கு அதன் தன்மை வித்தியாசமாக இருந்தது. 5 ஆட்டங்களில் 125 ரன்களுக்கு குறைவாக எடுக்கப்பட்டன. 300 ரன்களை கடந்த ஒரே அணி இலங்கை மட்டும் தான்.

அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 ஆசிய அணிகள் களம் கண்ட போதிலும் ஒரு அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. பெரிய போட்டிகளை எடுத்துக் கொண்டால் 1975-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஆசிய அணிகள் எதுவும் அரைஇறுதிக்கு வராதது இந்த போட்டியில் தான்.

Next Story