சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து இன்று மோதல்


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து இன்று மோதல்
x
தினத்தந்தி 27 May 2017 8:42 PM GMT (Updated: 27 May 2017 8:42 PM GMT)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

லண்டன்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்

8–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் ‘டாப்–8’ அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்தியா–நியூசிலாந்து மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணி, 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை (ஜூன் 4–ந் தேதி) சந்திக்கிறது.

இந்த நிலையில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

அஸ்வின்

6 வார ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் விளையாடிய பிறகு இந்திய வீரர்கள் சந்திக்கும் முதல் ஒருநாள் (50 ஓவர்) போட்டி இதுவாகும். கடைசியாக இந்திய அணி, கடந்த ஜனவரி மாதத்தில் இங்கிலாந்துடன் ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது.

காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் விளையாடாத இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் உடல் தகுதி பெற்று இந்திய அணிக்காக நேரடியாக களம் காணுகிறார். காயத்தால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரது செயல்பாடுகள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

யுவராஜ்சிங் ஆடுவது சந்தேகம்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் காய்ச்சல் காரணமாக நேற்று பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

பயிற்சி ஆட்டம் அதிகாரப்பூர்வமற்றது என்பதால் எல்லா அணிகளும் தங்கள் அணியின் 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களம் இறக்க முடியும்.

அணி வீரர்கள்

இந்த போட்டிக்கான இரு அணிகள் வருமாறு:–

இந்தியா: விராட்கோலி (இந்தியா), ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: கனே வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், லுக் ரோஞ்ச் (விக்கெட் கீப்பர்), நீல் புரூம், ஜேம்ஸ் நீ‌ஷம், கிரான்ட்ஹோம், கோரி ஆண்டர்சன், மிட்செல் சான்ட்னெர், ஜீத்தன் பட்டேல், ஆடம் மில்னே, மெக்லெனஹான், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.


Next Story