சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சி கிரிக்கெட்: நியூசிலாந்தை 189 ரன்னில் சுருட்டியது இந்தியா


சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சி கிரிக்கெட்: நியூசிலாந்தை 189 ரன்னில் சுருட்டியது இந்தியா
x
தினத்தந்தி 28 May 2017 9:00 PM GMT (Updated: 28 May 2017 7:54 PM GMT)

பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை இந்தியா 189 ரன்னில் சுருட்டியது.

லண்டன்,

பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை இந்தியா 189 ரன்னில் சுருட்டியது.

பயிற்சி கிரிக்கெட்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வென்றது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை போராடி தோற்கடித்தது. இதில் 342 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளித்து, பிறகு பாஹிம் அஷ்ரப் (64 ரன்), ஹசன் அலி (27 ரன்) ஆகியோரின் அதிரடியால் 3 பந்து மீதம் வைத்து வெற்றியை சுவைத்தது.

இந்த நிலையில் 3–வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் லண்டன் ஓவலில் நேற்று சந்தித்தன. இது அதிகாரபூர்வமற்ற ஆட்டம் என்பதால் 15 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

‌ஷமி மிரட்டல்

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்துக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குடைச்சல் கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்திலை 9 ரன்னில் வெளியேற்றிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி தனது இன்னொரு ஓவரில் கேப்டன் கனே வில்லியம்சன் (8 ரன்), நீல்புரூம் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை நிலைகுலைய வைத்தார்.

ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லுக் ரோஞ்ச் 66 ரன்களில் (63 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார்.

நியூசிலாந்து 189 ரன்

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். கோரி ஆண்டர்சன் (13 ரன்), சான்ட்னெர் (12 ரன்), கிரான்ட்ஹோம் (4 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை. மளமளவென விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 38.4 ஓவர்களில் 189 ரன்களில் அடங்கிப்போனது. ஜேம்ஸ் நீ‌ஷம் 46 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய தரப்பில் முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா, பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

மழையால் பாதிப்பு

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரஹானே 7 ரன்னில் கேட்ச் ஆனார்.

2–வது விக்கெட்டுக்கு ஷிகர் தவானும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து 68 ரன்கள் திரட்டினர். தனது பங்குக்கு 40 ரன்கள் (59 பந்து, 5 பவுண்டரி) சேகரித்த தவான் தவறான ஒரு ஷாட் அடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (0) ஷாட்பிட்ச் பந்துக்கு இரையானார்.

இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது விராட் கோலி 52 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டோனி 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


Next Story