கடைசி நேரத்தில் பாண்ட்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பயிற்சியாளர் கும்பிளே


கடைசி நேரத்தில் பாண்ட்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பயிற்சியாளர் கும்பிளே
x
தினத்தந்தி 6 Jun 2017 11:48 AM GMT (Updated: 6 Jun 2017 3:35 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் பாண்ட்யாவை, முன்கூட்டியே களம் இறக்க அனில் கும்பிளே முடிவு செய்துள்ளார்.

பர்மிங்காம், 

மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) பர்மிங்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இந்த போட்டியில் ஐசிசி நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி தற்போதும் பாகிஸ்தானை பந்தாடியது. மிக எளிய வெற்றியை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தவான், ரோகித் ஷர்மா, யுவராஜ் சிங், விராட் கோலி என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் அடித்து கலக்கினர். அதேபோல், கடைசி ஓவர்களில் தோனிக்கு பதிலாக இறங்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தார். கடைசி ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு குதுகலப்படுத்தினார். 

தன்னை முன்கூட்டியே இறங்குமாறு  பயிற்சியாளர் அனில் கும்பிளே எடுத்த  முடிவு சரியானதே என்று  ஹர்திக் பாண்ட்யா நிருபித்துள்ளார். இதற்கிடையே, ஹர்திக் பாண்ட்யா முன்கூட்டியே களம் இறக்கி விடப்பட்டதன் சுவரஸ்மயான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐசிசிக்கு அளித்த பேட்டியில் ஹர்திக் பாண்டியா தெரிவித்து இருப்பதாவது:- 46-வது ஓவரில் தான் என்னிடம் பயிற்சியாளர் அனில் கும்பிளே, அடுத்து நீங்கள் தான் இறங்க போகிறீர்கள். தயாராக இருங்கள் என்றார். உடனடியாக நான் தயாராகவும் யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார்.  

இதையடுத்து நான் களத்திற்கு சென்றேன்.  உண்மையில் சொல்லப்போனால், பேட்டிங் செய்ய போகையில்    மிகவும் அழுத்தமாக உணர்ந்தேன். ஆனால், எனது மனதில் பின்னணியில்  இது மிகவும் சாதாரண போட்டி என நினைத்துக்கொண்டேன். தேவையற்ற அழுத்தங்களை நான் எந்த போட்டியிலும்  எடுத்துக்கொள்வதில்லை” என்றார்.

Next Story