சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு சவாலாக விளங்கிய பந்து வீச்சாளர் யார்? தோனி பதில்


சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு சவாலாக விளங்கிய  பந்து வீச்சாளர் யார்? தோனி பதில்
x
தினத்தந்தி 7 Jun 2017 9:58 AM GMT (Updated: 7 Jun 2017 9:58 AM GMT)

சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு சவாலாக விளங்கிய பந்து வீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.

லண்டன்,

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 முன்னணி அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் விறுவிறுப்புக்கு தொடர் முழுவதும் பஞ்சம் இருக்காது. அதேபோல் நடப்பு தொடரும் மிக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் தற்போது அடிக்கடி நல்ல மழை பெய்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் போது மறுநாள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பலம் வாய்ந்த அணிகள் கூட தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. 

மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகள் டக்வொர்த் லீவிஸ் விதிகள் படி மாற்றியமைக்கப்படுகிறது. டக்வொர்த் லீவிஸ் விதிகள் ரசிகர்களை அதிகமாக குழப்பும் வகையிலேயே உள்ளது. டக்வொர்த் லீவிஸ் விதிகளை நையாண்டி செய்து சமூக வலைதளங்களிலும் மீம்ஸ் வெளியிடப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய போது மழை கண்ணா மூச்சி காட்டியது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் டக்வொர்த் லீவிஸ் விதிகள் அமல்படுத்தப்பட்டது. இந்த போட்டியில்  இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இங்கிலாந்தில் விராட் கோலியில் தொண்டு நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவர் தோனியிடம், ” நீங்கள் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பில் உள்ளீர்கள். எனவே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். டக்வொர்த்லீவிஸ் விதிகள் உங்களுக்கு புரிகிறதா?” என்று வினவினார். ரசிகரின் கேள்விக்கு கேலியாக பதிலளித்த தோனி, ஐசிசிக்கு கூட இந்த விதிகள் பற்றி தெரிந்து இருக்கும் என்று நான் கருதவில்லை” என்றார். 

தோனியிடம் தொடர்ந்து மற்றொரு கேள்வி எழுப்பட்டது. அது என்னவெனில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நீங்கள் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் மிகவும் கடினமான பந்து வீச்சாளர் யார்?:என கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த தோனி, ”எனக்கு உள்ள குறைந்த அளவு நுணுக்கங்களை வைத்து பார்க்கும் போது அனைத்து வேகப்பந்து பந்துவீச்சாளர்களும் சவாலானவர்கள்தான். இதையும் மீறி  ஒருவரை குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், நான் ஷோயப் அக்தரைத்தான் குறிப்பிடுவேன். ஏனெனில், அவர் அதிவேகமாக பந்து வீசக்கூடியவர். அவரால் யார்கர் வீச முடியும். பவுன்சர் பந்தையும் அவர் வீசுவார்.ஆனால், பீமர் பந்தை அவரிடம் எதிர்பார்க்க முடியாது.  அக்தரின் பந்து வீச்சை கணிப்பது கடினம்” என்றார். 

Next Story