இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது தென்னாப்ரிக்கா


இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது தென்னாப்ரிக்கா
x
தினத்தந்தி 24 Jun 2017 5:47 AM GMT (Updated: 24 Jun 2017 5:47 AM GMT)

இங்கிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாப்ரிக்கா சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து சென்றுள்ள தென்னாப்ரிக்கா அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடர் சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்னதாக நடந்து முடிந்தது. இதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில் டி20 தொடர் கடந்த ஜூன் 21 ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து டாசில் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. 

தொடர்ந்து விளையாடிய தென்னாப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இளப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. தென்னாப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மட்ஸ் 45 ரன்களும், கேப்டன் டி வில்லியர்ஸ் 20 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்தார். இருவருமே தலா 4 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் விளாசினர். அதை தவிர பெஹார்தின் 32 ஓட்டங்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் கூரன் 3 விக்கெட்டையும், பிளங்கிட் 2 விக்கெட்டையும், வில்லி, ஜோர்டன், டாவ்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 175 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 67 ஒட்டங்களையும் பேர்ஸ்டோ 47 ஓட்டங்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறியதால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. தென்னாப்ரிக்காவின் மோரிஸ் 2 விக்கெட்டையும் பெலுக்வாயோ, பட்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 

தென்னாப்ரிக்காவின் கிரிஸ் மோரிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்நிலையில் தொடரை யார் வெல்லப்போவது என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி வருகிற 25ம் தேதி கார்டிப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Next Story