சர்ப்ராசின் ‘இந்திய’ மாமா!


சர்ப்ராசின் ‘இந்திய’ மாமா!
x
தினத்தந்தி 24 Jun 2017 6:57 AM GMT (Updated: 24 Jun 2017 6:57 AM GMT)

லண்டன் ஓவல் மைதானத்தில் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மல்லுக்கட்டத் தயாராகிக்கொண்டிருந்தபோது,

மாமா மெகபூப் ஹசனுடன் சர்ப்ராஸ்

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதின் தாய்மாமா மெகபூப் ஹசன், இந்திய அணியின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.

குழப்பமாக இருக்கிறதா?

மெகபூப் ஹசன், இந்தியர். உத்தரப்பிரதேச மாநிலம் எடாவாவில் மனைவி, மகன், மகளுடன் வசிக்கிறார். அங்குள்ள வேளாண் பொறியியல் கல்லூரியில் சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறார்.

மெகபூப் ஹசனின் சகோதரியும் சர்ப்ராசின் அம்மாவுமான அகீலா பானு, ஷகீல் அகமதை மணந்தபிறகு கராச்சிக்கு இடம்பெயர்ந்துவிட்டார்.
அங்கு அவர், இறுதிப்போட்டிக்கு முன்னதாக தன்னைப் பேட்டி கண்ட டி.வி. நிருபர்களிடம், “இந்தப் போட்டியில் பாகிஸ்தான் ஒன்றுபட்டு ஆடினால் இந்தியாவை தோற்கடிக்கும்” என்று கூறிக்கொண்டிருந்தார்.

அதேநேரம், “நான் அடித்துச் சொல்கிறேன், இந்தப் போட்டியில் நிச்சயம் இந்தியாதான் வெல்லும். பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த அணி” என்று இங்கே நம்பிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தார், மெகபூப் ஹசன்.
“எனது மருமகன் சர்ப்ராஸ், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக விளையாடுவதில் எனக்குப் பெருமை என்பதை மறுக்க முடியாது. அவனது தலைமையில் பாகிஸ்தான் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன். அதேநேரம், இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதினால், இந்தியாவின் வெற்றிக்காகத்தான் நாங்கள் வேண்டுவோம். இந்தியா எங்கள் தாய்நாடு. தாய்நாடு என்பது எல்லாவற்றையும் விட உயர்ந்தது” என்று நெகிழ்கிறார், மெகபூப் ஹசன்.

சர்ப்ராஸ் அகமதின் பாட்டியான மெகபூப் ஹசனின் தாய்க்கு, சர்ப்ராஸ் கிரிக்கெட் விளையாடுவதில் அவ்வளவாக விருப்பமில்லையாம். “இந்தப் பையன் எப்போதும் பேட்டும் பந்துமாக அலைந்துகொண்டிருக்கிறானே... யார் மேலாவது பந்தை அடித்துவிடப் போகிறான்” என்று புலம்பிக்கொண்டே இருப்பாராம்.

மெகபூப் ஹசனுடன் வசித்த அவர், அவ்வப்போது பாகிஸ்தான் சென்று மகள், பேரனை பார்த்து வந்திருக்கிறார். ஆனால் மெகபூப் ஹசன், இதுவரை மூன்று முறை மட்டுமே சர்ப்ராஸை நேரில் சந்தித்திருக்கிறார்.

அதில், மெகபூப் ஹசனின் திருமணத்தின்போது நான்கு வயது குழந்தையாக அவரது அம்மாவால் சர்ப்ராஸ் இந்தியாவுக்கு தூக்கிவரப்பட்டதும் அடங்கும். அதேபோல, 2015-ல் கராச்சியில் சர்ப்ராசின் திருமணம் நடைபெற்றபோது மெகபூப் ஹசன் குடும்பத்துடன் சென்று பங்கேற்றார்.

திருமணம் முடிந்த சில நாட்களில், லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் தான் விளையாடுவதைப் பார்க்க, மாமா குடும்பத்தினரை விமானத்தில் அழைத்துச் சென்றார், சர்ப்ராஸ். ‘மாமு... மாமு...’ என்று மெகபூப் ஹசனிடம் பாசம் காட்டுவாராம் அவர். லக்னோவில் என்ஜினீயரிங் பயிலும் மாமா மகன் சல்மானுடனும் வாட்ஸப் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார், சர்ப்ராஸ்.

சர்ப்ராஸ் சிறுவயதில் இருந்தே சுட்டிப்பையன் என்று நினைவுகூர்கிறார், மெகபூப் ஹசன். “ஏதாவது கடைக்கு அவனை அழைத்துச் சென்றால், கேஷியர் கவுன்டரில் தாவியேறி அமர்ந்துகொள்வான். பயப்படவே மாட்டான். ஒருமுறை நானும் சகோதரி அகீலாவும் தெருவில் நடந்து சென்றோம். ஐந்து வயதான சர்ப்ராஸை நான் தூக்கி வைத்திருந்தேன். ஒரு தள்ளுவண்டிக் கடையைப் பார்த்ததும் நானும் அகீலாவும் விலை விசாரிப்பதற்காக நின்றோம். ஆனால் அதற்குள் சர்ப்ராஸ், தள்ளுவண்டியில் இருந்ததை எடுத்துச் சாப்பிட்டுவிட்டான்” என்று சிரித்தார்.

ஆனால், இறுதிப் போட்டியின் முடிவில் இந்தியா தோல்வியை அணைத்துக்கொள்ள, எல்லா இந்திய ரசிகர்களையும் போல மெகபூப் ஹசன் முகத்திலும் சோகம் சூழ்ந்தது.

பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “நம்முடையது நல்ல அணி. இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் எழுச்சி பெறும்!” என்றார் அழுத்தமாக.

Next Story