பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
x
தினத்தந்தி 24 Jun 2017 9:30 PM GMT (Updated: 24 Jun 2017 9:08 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

டெர்பி,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

பெண்கள் உலக கோப்பை

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

முதல் நாளான நேற்று டெர்பி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் இன்னிங்சை பூனம் ரவுத்தும், ஸ்மிர்தி மந்தனாவும் தொடங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் (26.5 ஓவர்) திரட்டினர். அதிரடியில் மிரட்டிய மந்தனா 90 ரன்களில் (72 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய பூனம் ரவுத் 86 ரன்களில் (134 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். கேப்டன் மிதாலி ராஜியும் (71 ரன், 73 பந்து, 8 பவுண்டரி) அரைசதம் அடிக்க, இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்தியா வெற்றி

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியில் 4 வீராங்கனைகள் ரன்-அவுட் ஆனது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரான் வில்சனின் ரன்-அவுட்டே (81 ரன்) ஆட்டத்தின் திருப்பு முனையாகும். இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஷிகா பான்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்திய அணி தனது 2-வது லீக்கில் வருகிற 29-ந்தேதி வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது.

இலங்கை சுருண்டது


மற்றொரு ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து சந்தித்தன. முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 188 ரன்களுக்கு அடங்கியது. ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 141 ரன்களுடன் (35.3 ஓவர்) விளையாடிக்கொண்டிருந்த இலங்கை அணி மேற்கொண்டு 47 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் 200 ரன்களை கூட தொட முடியாமல் போய் விட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹோலி ஹட்லெஸ்டன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து களம் கண்ட நியூசிலாந்து அணி 37.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. கேப்டன் சுசி பேட்ஸ் சதம் (106 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.

இன்று நடக்கும் 3-வது லீக்கில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதுகின்றன.

தொடர்ந்து 7-வது அரைசதம்:
இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சாதனை


இந்திய பெண்கள் அணியின் கேப்டன் 34 வயதான மிதாலிராஜ் நேற்றைய ஆட்டத்தில் 71 ரன்கள் விளாசினார். அவர் தொடர்ச்சியாக அடித்த 7-வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 அரைசதங்கள் (70*, 64, 73*, 51*, 54, 62*,71) நொறுக்கிய முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் லின்ட்சே ரீலர், இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்ரி ஆகியோர் தொடர்ந்து 6 அரைசதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் மிதாலியின் 47-வது அரைசதமாக இது பதிவானது. வீராங்கனைகளில் அதிக அரைசதங்கள் அடித்தவரும் இவர் தான். இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 46 அரைசதங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அதையும் மிதாலி முறியடித்து விட்டார். அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story