இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது


இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 25 Jun 2017 8:08 PM GMT (Updated: 25 Jun 2017 8:08 PM GMT)

பரபரப்பான சூழலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது.

மும்பை,

பரபரப்பான சூழலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது.

ஆலோசனை கூட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. கூட்டத்தில் லோதா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

லோதா கமிட்டியின் பரிந்துரையில் முக்கியமான ஒன்று, ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டுரிமை மட்டுமே இருக்க வேண்டும் என்பதாகும். இதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது அமல்படுத்தப்பட்டால், மும்பை, விதர்பா, சவுராஷ்டிரா, பரோடா போன்ற கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் வாரிய அமைப்பில் ஓட்டளிக்கும் உரிமையை இழக்க வேண்டி இருக்கும்.

கும்பிளே விவகாரம்

தற்போது அணியின் தேர்வு குழு கமிட்டியில் 3 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களால் எல்லா முதல்தர போட்டிகளுக்கும் நேரில் சென்று பார்ப்பது இயலாத ஒன்று. அதனால் மறுபடியும் 5 பேர் கொண்ட தேர்வு குழுவாக மாற்றுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

விவாதப்பொருளில், சர்ச்சைக்குரிய வகையில் பயிற்சியாளர் பதவியை துறந்த கும்பிளே விவகாரம் இல்லை என்றாலும் அது குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

கங்குலி பதில்

முன்னதாக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இரண்டு குழுவாக வினோத் ராய் தலைமையிலான கிரிக்கெட் நிர்வாக கமிட்டியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்குலியும் ஆலோசனையில் பங்கேற்றார்.

பயிற்சியாளரை தேர்வு செய்யும் கமிட்டியில் அங்கம் வகிக்கும் கங்குலியிடம், கும்பிளே பிரச்சினை குறித்து கேட்ட போது கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவரிடம் எந்த மாதிரியான பயிற்சியாளரை விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது, ‘போட்டியில் வெற்றியை ஈட்டித்தருபவராக இருக்க வேண்டும்’ என்று பதில் அளித்தார்.

இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரியிடம் புதிய பயிற்சியாளர் நியமனத்தில் கேப்டனிடம் ஆலோசிக்கப்படுமா என்று கேட்ட போது, அது குறித்து கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி முடிவு செய்யும் என்று கூறி நழுவினார்.


Next Story