மலிங்கா விளையாட ஆறு மாதம் தடை.


மலிங்கா விளையாட ஆறு மாதம் தடை.
x
தினத்தந்தி 28 Jun 2017 6:58 AM GMT (Updated: 28 Jun 2017 6:58 AM GMT)

விளையாட்டு அமைச்சரை பற்றி விமர்சித்ததால் மலிங்கா விளையாடுவதற்கு ஆறு மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. 

கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியில் பல கேட்சுகளை தவற விட்டதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயசிரி ஜெயசெகரா வீரர்கள் அதிக எடையோடு இருப்பதாலேயே கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதாகவும்,எனவே அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து எடையை குறைக்க வேண்டும் என்று விமர்சித்தார்.

அமைச்சரின் இந்த கருத்து குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இலங்கை அணியின் முன்னணி வீரரான மலிங்கா வீரர்கள் விளையாட்டைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும், அணிக்கு இராணுவ பயிற்சியை பரிந்துரைத்துள்ள அமைச்சரின் செயல் ஒரு கிளியின் கூட்டை குரங்கு கைப்பற்றுவதை போல இருப்பதாக கூறினார்.

இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை கிரிக்கெட் வாரிய நிர்வாகம் அமைத்தது. குழுவின் விசாரணையின் போது மலிங்கா தனது தவறை ஒப்பு கொண்டதாக குழுவின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். கிரிக்கெட் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதற்காக மலிங்காவிற்கு ஆறு மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அடுத்து விளையாடும் போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

வருகிற வெள்ளி கிழமை தொடங்கும் ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டி தொடரில் மட்டும் மலிங்கா விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story