பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இந்தியா போராடி தோல்வி


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இந்தியா போராடி தோல்வி
x
தினத்தந்தி 23 July 2017 8:42 PM GMT (Updated: 23 July 2017 8:42 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது.

லண்டன்,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது.

பெண்கள் உலக கோப்பை

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தன. 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி அரைஇறுதியுடன் துரத்தப்பட்டது.

இந்த நிலையில் சாம்பியன் கிரீடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், 3 முறை சாம்பியனான இங்கிலாந்தும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று சந்தித்தன. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் உடல்தகுதி பெற்று களம் திரும்பினார். இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கேப்டன் ஒரு ரன்

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி வின்பீல்டும், டாமி பியூமோன்டும் இங்கிலாந்தின் இன்னிங்சை நிதானமாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் கெய்க்வாட் பிரித்தார். அவரது பந்தில் வின்பீல்டு (24 ரன்) கிளன் போல்டு ஆனார். அடுத்த சில ஓவர்களில் பியூமோன்டும் (23 ரன்) நடையை கட்டினார்.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகி கேப்டன் ஹீதர் நைட்டை (1 ரன்) சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்த போது, பந்து ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால், ஹீதர் நைட் வெளியேற்றப்பட்டார்.

கோஸ்வாமி அசத்தல்

63 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த இங்கிலாந்து அணியை விக்கெட் கீப்பர் சாரா டெய்லரும், நதாலி ஸ்சிவெரும் கைகோர்த்து மீட்டனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது தாக்குதல் தொடுத்து, எதிரணியின் ஸ்கோரை வெகுவாக கட்டுப்படுத்தினர். இருப்பினும் இவர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடிய விதத்தை பார்த்த போது 250 ரன்களை நெருங்கும் என்றே தோன்றியது.

அணியின் ஸ்கோர் 146 ரன்களாக உயர்ந்த போது, ஒரே ஓவரில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி இரட்டை ‘செக்’ வைத்தார். சாரா டெய்லர் 45 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பிரான் வில்சன் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து நதாலி ஸ்சிவெரின் (51 ரன், 68 பந்து, 5 பவுண்டரி) விக்கெட்டையும் கோஸ்வாமி கபளகரம் செய்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் உருண்டதால் இங்கிலாந்தின் ரன்வேகம் இறுதி கட்டத்தில் கொஞ்சம் தளர்ந்தது. 7-வது வரிசையில் ஆடிய கேத்ரின் புருன்ட் தனது பங்குக்கு 34 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. ஜெனி குன் (25 ரன்), லாரா மார்ஷ் (14 ரன்) களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளும், ராஜேஷ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மிதாலி ஏமாற்றம்

தொடர்ந்து 229 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு இந்த முறையும் திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. மந்தனா (0) சிரப்சோலேவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் மிதாலிராஜ் (17 ரன், 31 பந்து, 3 பவுண்டரி) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு பூனம் ரவுத்தும், ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை நிமிர வைத்ததுடன் நல்ல அடித்தளம் போட்டு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினர். அரைசதத்தை நிறைவு செய்த ஹர்மன்பிரீத் கவுர் 51 ரன்களில் (80 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வேதா கிருஷ்ண மூர்த்தி, பூனம் ரவுத்துடன் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிப்பது போலவே தென்பட்டது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்களுடன் (42.4 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது.

திருப்பம் தந்த சிரப்சோலே

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வேகப்பந்து வீச்சாளர் சிரப்சோலே ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக புரட்டிபோட்டு விட்டார். அவரது பந்து வீச்சில் பூனம் ரவுத் (86 ரன், 115 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். தொடர்ந்து வேதா கிருஷ்ணமூர்த்தி (35 ரன்), கோஸ்வாமி (0) வரிசையாக அணிவகுப்பு நடத்தினர். விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவும் (0) தாக்குப்பிடிக்கவில்லை.

முக்கியமான கட்டத்தில் 10 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் இந்திய அணி தள்ளாடியது. அதே சமயம் இங்கிலாந்து வீராங்கனைகள் உற்சாகத்தில் மிதந்தனர். பீல்டிங்கில் துடிப்புடன் செயல்பட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இந்தியா தோல்வி

கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது. ஆனால் பதற்றத்தில் எல்லாவற்றையும் நமது வீராங்கனைகள் கோட்டை விட்டு விட்டனர். ஷிகா பான்டே (4 ரன்), தீப்தி ஷர்மா (14 ரன்), கெய்க்வாட் (0) ஆகியோர் ஆட்டம் இழந்து, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக்கினர். முடிவில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சிரப்சோலே 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

வாகை சூடிய இங்கிலாந்துக்கு ரூ.4¼ கோடியும், 2-வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு ரூ.2 கோடியே 12 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அதிர்ஷ்டம் இல்லை

ந்தியா பேட் செய்து கொண்டிருந்த போது மழை மேகம் சூழ்ந்து இருந்தது. எந்த நேரத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்ற நிலைமை காணப்பட்டது. ஒரு சில நேரம் மழைத் துளிகளும் விழுந்தன. அவ்வாறு மிரட்டிய போதெல்லாம் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. அதாவது மழை பெய்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டால் இந்தியா வெற்றி பெறும் என்ற வகையிலேயே கணிப்புகள் அமைந்தன. 48-வது ஓவரில் கூட இந்தியா 4 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஆனால் வருண பகவான் நமக்கு கருணை காட்டாமல் போய் விட்டார்.

மேலும் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன. பூனம் ரவுத் 64 ரன்னில் இருந்த போது ஸ்டம்பிங் கண்டத்தில் இருந்து மறுவாழ்வு பெற்றார். வேதா கிருஷ்ணமூர்த்திக்கு 14 ரன்னில், இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் எளிதான கேட்ச்சை வீணாக்கினார். கடைசி வரை களத்தில் இருந்த பூனம் யாதவ் (1 ரன்) கொடுத்த சுலப கேட்ச்சை குன் தவற விட்டார்.

பூனம் ரவுத் 86 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆன போது, அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்ய, எதிர்முனையில் நின்ற வீராங்கனையிடம் யோசனை கேட்டார். ஆனால் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் நடுவர் அதை நிராகரித்து விட்டார். இத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் அதை இந்தியா பயன்படுத்த தவறியதால் கோப்பையும் கை நழுவிப்போனது.

மிதாலியின் நிறைவேறாத ஆசை

இந்திய கேப்டன் மிதாலிராஜ் 2005-ம் ஆண்டு இந்திய அணியை இறுதி ஆட்டத்திற்கு அழைத்து சென்றார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2-வது முறையாக இப்போதும் அவரது தலைமையில் இந்திய படை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. வெற்றியின் விளிம்புக்கு வந்தும் இறுதியில் கோப்பையை கோட்டை விட்டது.

34 வயதான மிதாலிராஜிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாகும். அதனால் அவரது உலக கோப்பை ஆசை, கடைசி வரை கனவாகவே போய் விட்டது. இந்தியா மட்டுமல்ல, இதுவரை எந்த ஆசிய அணியும் பெண்கள் உலக கோப்பையை உச்சிமுகர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story