‘பதற்றத்தால் தோல்வி அடைந்தோம்’ கேப்டன் மிதாலிராஜ் பேட்டி


‘பதற்றத்தால் தோல்வி அடைந்தோம்’ கேப்டன் மிதாலிராஜ் பேட்டி
x
தினத்தந்தி 24 July 2017 11:15 PM GMT (Updated: 24 July 2017 7:37 PM GMT)

‘பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பதற்றத்தால் தோல்வி அடைந்தோம்’ என்று இந்திய அணி கேப்டன் மிதாலிராஜ் தெரிவித்தார்.

லண்டன்,

11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இதில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால் 28 ரன்னில் கடைசி 7 விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தது. 48.4 ஓவர்களில் இந்திய அணி 219 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்தது.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் மிதாலிராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இறுதிப்போட்டி என்பதால் எல்லோரும் மிகவும் பதற்றத்துடன் இருந்தனர். இது தான் எங்கள் தோல்விக்கு காரணம் என்று கருதுகிறேன். போதிய அனுபவம் இல்லாததால் நெருக்கடியான சூழ்நிலையை எங்களால் சமாளிக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இந்த போட்டி தொடரில் எங்கள் அணியினர் போராடிய விதம் பாராட்டுக்குரியது. வருங்கால சந்ததியினருக்கு எங்கள் அணியினர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது பெண்கள் கிரிக்கெட்டை எல்லோரும் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றத்தை நமது வீராங்கனைகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நமது அணியில் திறமையான வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். கடைசி நேரத்தில் நமது அணியினர் குழம்பி போய் விட்டனர். பூனம் ரவுத் சிறப்பாக விளையாடினார். பூனம்–கவுர் இணை ஆட்டம் மிகவும் முக்கியமானது. இருவரும் நல்ல பங்களிப்பை அளித்தனர். கடைசி நிலை வீரர்கள் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த பிரச்சினை அணியில் நீண்ட நாட்களாக இருக்கிறது. பேட்டிங்கில் எல்லோரும் பங்களிக்க வேண்டியது அவசியமானதாகும்.

பொதுமக்களிடம் இருந்து மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அணியின் செயல்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியமும் பெருமை அடையும் என்று நம்புகிறேன். லீக் ஆட்டங்களில் நாங்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் இறுதிபோட்டிக்கு முன்னேறியதுடன் உள்ளூர் அணியான இங்கிலாந்துக்கு கடும் சவால் அளித்தோம். மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் விளையாடிய அனுபவம் இந்த போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்பட வழிவகுத்தது. இதேபோல் மற்ற வீராங்கனைகளும் பிக் பாஷ் போன்ற போட்டிகளில் விளையாடினால் அனுபவம் பெறுவதுடன் தங்கள் ஆட்டத்தையும் மேம்படுத்த முடியும். பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி தொடங்க இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். இது தான் எனக்கு கடைசி உலக கோப்பை போட்டியாகும்.

இவ்வாறு மிதாலிராஜ் கூறினார்.


Next Story