டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை பந்தாடியது திண்டுக்கல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்:  மதுரையை பந்தாடியது திண்டுக்கல்
x
தினத்தந்தி 25 July 2017 10:15 PM GMT (Updated: 25 July 2017 9:53 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை அணியை 117 ரன்களில் சுருட்டிய திண்டுக்கல் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்தது.

நத்தம்,

2–வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் திண்டுக்கல் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்டும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் அருண் கார்த்திக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி மதுரை அணியின் பேட்டிங்கை சிவராமகிருஷ்ணனும், கேப்டன் அருண் கார்த்திக்கும் தொடங்கினர். சுழற்பந்து வீச்சாளர் சஞ்சயின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி ஓடவிட்ட சிவராமகிருஷ்ணன் (14 ரன்) வேகப்பந்து வீச்சாளர் சன்னிகுமாரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அதன் பிறகு மதுரையின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அருண் கார்த்திக் 6 ரன்னிலும், ஷிஜித் சந்திரன் 4 ரன்னிலும் சன்னிகுமாரால் வெளியேற்றப்பட்டனர்.

திண்டுக்கல்லின் பந்து வீச்சில் திணறிய மதுரை அணியில் சுரேஷ்குமார் (39 ரன்), எல்.விக்னேஷ் (28 ரன்) ஆகியோர் மட்டும் கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடினர். இதனால் கவுரவமாக 100 ரன்களை தாண்டியது. முடிவில் அந்த அணி 19.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. நடப்பு தொடரில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோர் இது தான்.

திண்டுக்கல் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சன்னிகுமார் 3 விக்கெட்டுகளும், நடராஜன், சஞ்சய், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி திண்டுக்கல் வீரர்கள் சுப்பிரமணிய சிவாவும், கங்கா ஸ்ரீதர் ராஜூம் களம் புகுந்தனர். சுப்பிரமணிய சிவா, மதுரையின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளினார். சிக்சரும், பவுண்டரியுமாக நாலாபுறமும் பந்துகளை சிதறியடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் 25 பந்துகளில் அரைசதத்தை கடந்து அமர்க்களப்படுத்தினார். டி.என்.பி.எல். போட்டியில் 2–வது அதிவேக அரைசதம் இதுவாகும். 5 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை மதுரை அணியால் பிரிக்க முடியவில்லை.

முடிவில் திண்டுக்கல் அணி 10.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் திரட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்பிரமணிய சிவா 84 ரன்களுடனும் (41 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்), கங்கா ஸ்ரீதர் ராஜூ 32 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் நிகழ்வாகும்2–வது ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடியிடம் தோற்று இருந்தது.

மதுரை அணியின் பரிதாபம்

கடந்த சீசனில் 7 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி, இந்த ஆண்டிலாவது ஏதாவது திருப்பத்தை ஏற்படுத்துமா? என்று பார்த்தால் முதல் ஆட்டத்திலேயே மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அந்த அணி தொடர்ச்சியாக சந்தித்த 8–வது தோல்வி இதுவாகும்.

Next Story