டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்:  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது வெற்றி
x
தினத்தந்தி 13 Aug 2017 11:15 PM GMT (Updated: 13 Aug 2017 7:32 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை வெளியேற்றி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6-வது வெற்றியை பெற்றது.

நத்தம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நத்தத்தில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் சந்தித்தன. கில்லீஸ் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கேப்டன் சதீஷ், கோபிநாத் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் கில்லீஸ் கேப்டன் பொறுப்பை தலைவன் சற்குணம் ஏற்றார்.

டாஸ் ஜெயித்த திண்டுக்கல் அணி கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஜெகதீசன் 53 ரன்களும் (42 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), வில்கின்ஸ் விக்டர் 45 ரன்களும் (40 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்தது. சில கேட்ச் வாய்ப்புகளை கில்லீஸ் பீல்டர்கள் வீணடித்து விட்டனர். பீல்டிங் கச்சிதமாக இருந்திருந்தால் அவர்களை இதை விட குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தி இருக்கலாம். கில்லீஸ் தரப்பில் அலெக்சாண்டர், அந்தோணி தாஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து 146 ரன்கள் இலக்கை துரத்திய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. கவுஜித் சுபாஷ் 21 ரன்னிலும், கார்த்திக் 9 ரன்னிலும், கேப்டன் தலைவன் சற்குணம் 14 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

56 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளான கில்லீஸ் அணிக்கு சசிதேவும், அந்தோணிதாசும் கைகொடுத்தனர். ஆதித்யா அருண், சிலம்பரசன் ஓவர்களில் அந்தோணிதாஸ் சிக்சர்களை பறக்க விட்டு, அணியை சிக்கலில் இருந்து மீட்டார். இதில் ஒரு சிக்சர் தொடரின் 300-வது சிக்சராக பதிவானது.

அபாரமாக ஆடிய அந்தோணி தாஸ் 38 ரன்னிலும் (21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), சசிதேவ் 45 ரன்னிலும் (32 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள். இதனால் இறுதி கட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி ஓவரில் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆதித்யா அருண் வீசினார்.

முதல் பந்தை சந்தித்த ராகுல் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் யோமகேஷ் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் ரன் இல்லை. புல்டாசாக வீசப்பட்ட 4-வது பந்தை எதிர்கொண்ட ராகுல், அதை அலாக்காக சிக்சருக்கு திருப்பி, திரிலிங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 11 ரன்னுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு இது 6-வது வெற்றியாகும். 4-வது தோல்வியை தழுவிய திண்டுக்கல் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இன்றைய கடைசி லீக்கில் கோவை கிங்ஸ் அணி திருச்சியை வீழ்த்தினால் 8 புள்ளிகளுடன் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும். மாறாக தோல்வி அடைந்தால் கோவை, திருவள்ளூர் வீரன்ஸ் ஆகிய இரு அணிகளில் ஒன்று ‘ரன்-ரேட்’ அடிப்படையில் அடுத்த சுற்று வாய்ப்பை பெறும்.

சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story