டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
x
தினத்தந்தி 14 Aug 2017 11:45 PM GMT (Updated: 14 Aug 2017 8:17 PM GMT)

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

8 அணிகள் இடையிலான 2–வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று (குவாலிபையர்) ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்–சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி காணும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. நாளை நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமனேட்டர்) சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. தனது 7 லீக் ஆட்டங்களிலும் எளிதில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு சிறப்பாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு 2–வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தில் உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நன்றாக உள்ளது. இருப்பினும் தொடக்க ஆட்டம் மற்றும் பீல்டிங்கில் அந்த அணி ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடந்த ஆண்டில் 2 முறையும், இந்த ஆண்டில் ஒரு முறையும் தூத்துக்குடி அணியிடம் தோல்வி கண்டுள்ளது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முனைப்பு காட்டும். அதேநேரத்தில் தனது வெற்றி உத்வேகத்தை தொடர்ந்து இறுதிப்போட்டிக்குள் நுழைய தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி அணி முழு முயற்சி மேற்கொள்ளும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருகாது.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story