2–வது தகுதி சுற்றில் சிறப்பாக ஆடுவோம்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி நம்பிக்கை


2–வது தகுதி சுற்றில் சிறப்பாக ஆடுவோம்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி நம்பிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2017 11:45 PM GMT (Updated: 16 Aug 2017 8:33 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 2–வது தகுதி சுற்றில் சிறப்பாக விளையாடுவோம் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுக்க, அந்த இலக்கை வாஷிங்டன் சுந்தரின் (73 ரன், 36 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) அதிரடியால் தூத்துக்குடி அணி 12.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

தோல்வி அடைந்தாலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னொரு வாய்ப்பு உள்ளது. இரண்டாவது தகுதி சுற்றில் சேப்பாக் அணி நாளை நெல்லையில் விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி அளித்த பேட்டியில் கூறியதாவது:–கேள்வி:– எதிரணியை 115 ரன்னுக்குள் சுருட்ட, தொடக்கத்திலேயே வித்தியாசமாக செய்திருக்க வேண்டும் என்று உணர்கிறீர்களா?

பதில்: 2–வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் சசிதேவை பந்து வீச அழைத்தோம். தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் அருமையாக இருந்தது. மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாக வெவ்வேறு திசைகளில் பந்தை அடித்து நொறுக்குகிறார். எல்லா பாராட்டுகளும் அவரையே சாரும். அவரை போன்ற வீரர்கள் எதிரணிக்கு முள்ளாகத்தான் இருப்பார்கள். தொடரில் 4 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று விட்டதில் இருந்தே பேட்டிங்கில் மற்றவர்களை விட இவரே சிறந்தவர் என்பதை சொல்ல முடியும்.

கேள்வி: இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு இருந்ததை நினைத்து ஆறுதல் அடைந்தீர்களா?

பதில்: இது எங்களுக்கு கடினமான போட்டியாக இருந்தது. இரண்டு சீசனையும் சேர்த்து தூத்துக்குடி அணி எங்களை 4 முறை தோற்கடித்து இருக்கிறது. தூத்துக்குடியை தவிர்த்து மற்ற அணிகளுக்கு எதிராக நாங்கள் சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறோம். அடுத்த போட்டிக்கு முன்பாக முழு உத்வேகத்துடன் மீண்டும் ஒருங்கிணைவோம். நெல்லையில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். ஒவ்வொரு ஆட்டமாகத்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

கேள்வி:– இடக்கை சுழற்பந்து வீச்சின் தாக்கம் இருக்கும் நிலையில், அவர்களை திறம்பட எதிர்கொள்ள வலைப்பயிற்சியின் போது ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: இந்த தொடரில் கணேஷ் மூர்த்தி, சீனிவாசன், சாய் கிஷோர், அலெக்சாண்டர், ரஹில் ஷா, மோகன் பிரசாத், சுரேஷ் பாபு என்று நிறைய இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நான் வலதுகை பேட்ஸ்மேனாக இருந்திருந்தால், எனது ஆட்டத்தில் அதையும் சேர்த்து இருப்பேன்.

போட்டிகளுக்கு இடையே போதிய நேரம் இல்லாததால் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ பயிற்சி எடுக்கவோ, முயற்சிக்கவோ முடியவில்லை. கடந்த ஆண்டு போட்டியின் போது கணிசமான இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதை பார்த்து, அவர்களை சமாளிக்கும் வகையில் இந்த முறை பேட்ஸ்மேன்கள் தயாராகி இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், நிறைய இளம் வீரர்கள் அவ்வாறு தயார் ஆகாதது ஆச்சரியம் அளிக்கிறது.  இவ்வாறு பதானி கூறினார்.


Next Story