ஆஸ்திரேலியர்கள் போல் விராட் கோலி செயல்படுகிறார்; மைக்கேல் கிளார்க் பேட்டி


ஆஸ்திரேலியர்கள் போல் விராட் கோலி செயல்படுகிறார்; மைக்கேல் கிளார்க் பேட்டி
x
தினத்தந்தி 17 Aug 2017 11:15 PM GMT (Updated: 17 Aug 2017 9:40 PM GMT)

விராட் கோலியின் ஆக்ரோ‌ஷமான அணுகுமுறை, உத்வேகம் எல்லாமே அவருக்குள் ஒரு ஆஸ்திரேலியர் இருப்பதையே காட்டுகிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலியாவில் கணிசமான ரசிகர்கள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆஸ்திரேலியர்களிடம் காணப்படும் உத்வேகமும், அணுகுமுறையும் விராட் கோலியிடம் நிறைய இருக்கிறது. சொல்லப்போனால் விராட் கோலிக்குள் ஒரு ஆஸ்திரேலியன் இருக்கிறான்.

அவர் களத்தில் மிக கடினமாக உழைத்து, சவால் கொடுக்கிறார். அவரைப் பற்றி அறிந்தவர்கள், களத்தில் எந்த அளவுக்கு போராட்ட குணத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை உணர்ந்து இருப்பார்கள். இதே குணம் தான் ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரர்களிடமும் உண்டு. எனவே ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு நிச்சயம் மரியாதை இருக்கும். அதற்காக ஆஸ்திரேலிய ஊடகத்தினர் ஒரு போதும் அவரை புகழ்ந்து எழுதமாட்டார்கள். அவர்கள், கோலி பற்றிய எதிர்மறை செய்திகளை எழுதவே விரும்புவார்கள். ஆனால் கோலியுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. மதிப்புக்குரிய ஒரு வீரர்.

இந்திய அணி தற்போது முழுமையான நம்பிக்கையுடன் இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலிய அணியின் இந்திய பயணம் (செப்டம்பர்–அக்டோபரில் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி) கடினமாக இருக்கப்போகிறது. இந்திய அணி நன்றாக விளையாடி வரும் நிலையில், இந்த தொடர் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.

ஆஸ்திரேலிய ரசிகர்கள் தங்களது அணி உலகின் தலைசிறந்த அணியாக திகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதே நேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எல்லா வகையிலும் தற்போது சிறப்பான நிலையில் இருக்கிறது. அதனால் இந்தியாவை வீழ்த்துவது கடினமே.

களத்திற்கு வெளியே கோலி பழகுவதற்கு இனிமையானவர். அற்புதமான ஒரு வீரர். எல்லா போட்டியிலும் வெற்றி பெற விரும்புவார். அதில் இருந்து பின்வாங்க நினைக்கமாட்டார். அடுத்த 4 மாதங்களில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்கள் எந்த அளவுக்கு சவாலாக இருக்கும் என்பதை அவர் அறிவார். தனது அணியை அதற்கு ஏற்ப தயார்படுத்தி வருகிறார்.

இந்த ஆண்டின் கடைசியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாட இருக்கிறது. அதன் பிறகு 2018–ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கும், 2019–ம் ஆண்டில் இங்கிலாந்துக்கும் செல்ல இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை அவர்களது இடத்தில் இந்திய அணி தோற்கடித்தால், அதன் பிறகு இந்தியா தான் உலகின் ‘நம்பர் ஒன்’ அணி என்பதில் சந்தேகமில்லை.  இவ்வாறு கிளார்க் கூறினார்.


Next Story