‘தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன்’ ஷிகர் தவான் சொல்கிறார்


‘தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன்’ ஷிகர் தவான் சொல்கிறார்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:45 PM GMT (Updated: 21 Aug 2017 7:56 PM GMT)

தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான் தெரிவித்தார்.

தம்புல்லா,

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 132 ரன்கள் குவித்தார். இந்த போட்டி தொடரில் ஷிகர் தவான் அடித்த 3-வது சதம் இதுவாகும். காலே மற்றும் பல்லகெலே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்தார்.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் ஷிகர் தவான் தம்புல்லாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தோல்வி நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும். தோல்விகள் மூலம் நான் ஏற்கனவே அதிகம் கற்று விட்டேன். நான் சரிவை சந்தித்து விட்டதால் அது பற்றி அதிகம் சிந்திப்பது கிடையாது. சரிவு வருவதாக இருந்தால் வந்து தான் தீரும். நான் நன்றாக விளையாடினாலும், நன்றாக விளையாடாவிட்டாலும் எனது செயல்பாடுகள் குறித்து தான் கவனம் செலுத்துவேன்.

சிறப்பாக விளையாட வேண்டும்

அடுத்த உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. அதுவரை தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அது தான் எனது இலக்காகும். நான் சரியாக செயல்படாவிட்டால் நமது அணியில் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் அந்த இடத்தை பிடித்து கொள்வார். நான் எனது உயர்வான உடல் தகுதி நிலையை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். ரன்கள் நிறைய அடிப்பதுடன், எனது உடல் தகுதி, திறன், பீல்டிங் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் விளையாடியது போல் இந்த தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். நான் பிட்ச் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. பந்தை கவனித்து அதற்கு தகுந்தபடி ஆடுவேன். இலங்கை அணி 300 ரன்கள் எடுக்கும் என்று நினைத்தேன். மிடில் ஓவர்களில் விக்கெட் இழந்ததால் நாம் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினோம். இலங்கை அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருந்தாலும் சிறப்பான நிலையை எட்ட சற்று காலம் பிடிக்கும். இலங்கை அணி நன்றாக செயல்பட கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

Next Story