‘திட்டமிட்டபடி செயல்பட்டு கோப்பையை வென்றோம்’ சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ் பேட்டி


‘திட்டமிட்டபடி செயல்பட்டு கோப்பையை வென்றோம்’ சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ் பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2017 12:00 AM GMT (Updated: 21 Aug 2017 8:18 PM GMT)

‘டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் திட்டமிட்டப்படி விக்கெட்டை விரைவில் இழக்காமல் செயல்பட்டு கோப்பையை வென்றோம்’ என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் ஆர்.சதீஷ் தெரிவித்தார்.

சென்னை,

2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றதுடன், கடந்த சீசனையும் சேர்த்து தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றியை சுவைத்த தூத்துக்குடி அணியின் வெற்றி பயணத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன் வசந்த் சரவணன் ஆட்டநாயகன் விருதையும், தூத்துக்குடி அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதையும் தனதாக்கினார்கள். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய்கிஷோர் (17 விக்கெட்டுகள்) அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான விருதையும், காரைக்குடி காளை அணி வீரர் அனிருதா அதிக சிக்சர் (18 சிக்சர்கள்) அடித்ததற்கான விருதையும், தூத்துக்குடி அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிக பவுண்டரிகள் (48 பவுண்டரிகள்) அடித்ததற்கான விருதையும் பெற்றனர்.

கேப்டன் சதீஷ் பேட்டி

வெற்றிக்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் ஆர்.சதீஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வசந்த் சரவணனும், நானும் 25 ஆண்டுகளாக ஒன்றாக விளையாடி வருகிறோம். எனவே அடுத்து எந்த பந்து வீச்சாளர் பந்து வீச தேர்வு செய்யப்படுவார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். விக்கெட்டை விரைவில் இழந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு அதன்படி செயல்பட்டோம்.

நாம் படகில் இருக்கிறோம். நமக்கு நல்ல திட்டங்கள் தேவை என்று பயிற்சியாளர் ஹேமங்பதானி சொன்னார். அது இந்த ஆட்டத்தில் வேலை செய்து இருக்கிறது. தூத்துக்குடி அணிக்கு எதிரான முந்தைய 4 ஆட்டங்களிலும் நாங்கள் விரைவில் விக்கெட்டை இழந்தோம். நாங்கள் விக்கெட்டை இழந்தால் உத்வேகத்தை இழந்து விடுவோம். எனவே விக்கெட்டுகள் எங்கள் கைவசம் இருக்க வேண்டும் என்று நினைத்து நிதானமாக ஆடினோம்.

இருப்பினும் ஒரு ஓவர் மீதம் வைத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. தூத்துக்குடி அணியினர் நெருக்கடி அளிக்கும் வகையில் சில ஓவர்கள் பந்து வீசினார்கள். அதனை நாங்கள் பொறுமையுடனும், பதற்றமின்றியும் எதிர்கொண்டோம். நாங்கள் சற்று நிதானமாக ஆடினாலும் சில பவுண்டரிகள் அடித்தால் அதனை சரி செய்து நல்ல நிலையை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். அதனால் தான் விக்கெட்டை இழக்காமல் நிதானம் காட்டினோம். எதிரணியினர் விக்கெட்டை வீழ்த்த முயற்சித்தனர்.

அது முடியாமல் போனதால் அவர்கள் மனரீதியாக சோர்வடைந்து விட்டனர். விக்கெட்டை இழக்காமல் களத்தில் நிலைத்து நின்று ஆடினால் எந்த போட்டியிலும் வெல்லலாம் என்று நம்பிக்கை இருந்தது. ஒற்றுமையாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு இதைவிட சிறப்பாக செயல்படுவோம்.

இவ்வாறு கேப்டன் ஆர்.சதீஷ் கூறினார்.

நெருக்கடி இல்லை

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங்பதானி கருத்து தெரிவிக்கையில், ‘இது மிகவும் பரபரப்பான போட்டியாகும். அதில் இருந்து இன்னும் என்னால் வெளியே வரமுடியவில்லை. நாங்கள் செயல்பட்ட விதம் மிகவும் திருப்தி தந்தது. தூத்துக்குடி அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் ஆட்டத்தை சரியான தருணத்தில் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். எங்கள் தொடக்கம் நன்றாக இருந்தாலும், பிறகு சற்று மெதுவாக ஆடினோம். அதுவே ஒரு கட்டத்தில் எதிரணியின் கை ஓங்க காரணமாக அமைந்தது. வசந்த் சரவணன் இந்த சீசனில் சரியாக விளையாடாவிட்டாலும் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அது சரியானது என்பதை அவர் நிரூபித்து விட்டார்.

 அதற்கு அவரது அனுபவம் முக்கிய காரணமாகும். பரபரப்பான கடைசி கட்டத்தில் அவரை போன்ற ஒருவர் தேவை. கடைசி ஓவருக்கு முன்பாகவே அவர் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். எல்லாரும் தூத்துக்குடி அணியே வெல்லும் என்று சொன்னதால் எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. எதிரணியை குறைத்து மதிப்பிட முடியாது. அபாரமான திறமை கொண்ட வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். 20,000 ரசிகர்களையும் எங்கள் வீரர்கள் மகிழ்வித்தனர்’ என்றார்.
தோல்விக்கு பிறகு தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் ஆலோசகர் மாண்டி தேசாய் அளித்த பேட்டியில், ‘நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். கடைசி கட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் சதீஷ் அனுபவம் வாய்ந்தவர். அவர் நம்பிக்கையுடன் விளையாடினார். அவர் அடித்த 2 சிக்சர்கள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அஸ்வின் கிறிஸ்ட் ஆடாதது எங்களுக்கு பாதிப்பு தான். டி.என்.பி.எல். போட்டியில் இரண்டு ஆண்டுகளில் 2 சாம்பியன் அணிகள் கிடைத்து இருப்பது நல்ல தொடக்கமாகும். தோல்விக்கு நெருக்கடி காரணம் என்று சொல்ல முடியாது. ஐ.பி.எல். ஏலத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய்கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story