திறமையான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தேவை -பரத் அருண்


திறமையான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தேவை -பரத் அருண்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:00 PM GMT (Updated: 22 Aug 2017 7:56 PM GMT)

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நாளை நடக்கிறது.

பல்லகெலே,

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நாளை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிறந்த பந்து வீச்சாளர்களை வார்த்தெடுக்கும் இந்த பணிக்கு இப்போது தான் வந்துள்ளேன். புதுமுக பவுலர்களை எந்த வகையில் சிறப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து இந்திய ‘ஏ’ அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோரிடம் ஆலோசிப்பேன். அவர்களிடம் தகவல்களை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும். கை மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசுவதில் கைதேர்ந்த குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இதே போல் திறமையான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கிடைத்து விட்டால், இன்னும் நன்றாக இருக்கும்’ என்றார்.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2015-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு வெறும் 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதனால் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்தும் திட்டத்தில் அஸ்வினுக்கு இடம் உண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பரத் அருண், ‘இந்த கேள்வியை நீங்கள் தேர்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் ஒரு பவுலிங் பயிற்சியாளராக, அஸ்வின் மிகவும் திறமையான பவுலர் என்பதை அறிவேன். நடந்ததை திரும்பி பார்க்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் ஒரு நாள் போட்டி அணியில் அஸ்வின் இருப்பார். அதே சமயம் சுழற்சி அடிப்படையில் மற்ற பவுலர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம்’ என்றார்.

Next Story