பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா


பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
x
தினத்தந்தி 12 Sep 2017 12:11 PM GMT (Updated: 12 Sep 2017 12:17 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சென்று கொண்டிருந்த காரின் பின்பக்க டயர் வெடித்தது.

காசியாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா(வயது 30). இந்திய அணிக்காக 223 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணியின் தேர்வுக்குழு சுரேஷ் ரெய்னாவின் பெயரை பரிசீலிக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா துலிப் டிராபி போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்திய புளூ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சுரேஷ் ரெய்னா, கான்பூரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க காசியாபாத்தில் இருந்து தனது சொகுசு காரான ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் கார் எட்டவா என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது, காரின் டயர் வெடித்தது. 

காரில் மாற்று டயர் இல்லாததால், சாலையிலேயே ரெய்னா காத்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கூறினர். இதையடுத்து போலீசார் மாற்றுக் கார் மூலம் கான்பூருக்கு ரெய்னாவை அனுப்பி வைத்தனர். ரெய்னா குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் பின்பக்க டயர் வெடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், அதிவேகத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து நேரிட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க கூடும் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story